மலையாளம் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படத்தை தமிழில்  ரீமேக் செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருந்து அதை செயல்படுத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பி. வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ், விஜயின் சச்சின் படங்களுக்கு போட்டியாக களத்தில் குதித்தது சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர் படமான சந்திரமுகி.  


சாதனை படைத்த படம் 


ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர், விஜயகுமார், வினீத், மாளவிகா, கே.ஆர். விஜயா என மிக பெரிய திரைபட்டாளமே ஒன்று கூடி நடித்த இப்படம் கிட்டத்தட்ட 890 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் திரையரங்கில் கலக்கிய ஒரு படம் என்ற சாதனையை நிகழ்த்தியது சந்திரமுகி. 


 



ஜோதிகாவின் வெரைட்டி :


சந்திரமுகியாக டெரரான கதாபாத்திரத்திலும் கங்காவாக மென்மையான ஒரு கதாபாத்திரத்திலும் வெரைட்டி காண்பித்து திரையரங்கையே அதிரவைத்து விட்டார் ஜோதிகா. ராரா சரசுக்கு ராரா... என விஸ்வரூபம் கலங்கடித்த ஜோதிகாவின் நடிப்பு அனைவரையும் தூக்கிசாப்பிட்டுவிட்டது. கங்கா தன்னை சந்திரமுகியாக கற்பனை செய்து கொண்டு அரங்கேற்றும்  காட்சிகள் ஒவ்வொன்றிலும் கைதட்டல்களை அள்ளினார். மனநல  மருத்துவரான சரவணனை வேட்டையனாக கற்பனை செய்து கொண்டு அவரை அழிக்க வேண்டும் என கிளைமாக்ஸ் காட்சியில் துடிக்கும் போதும் பார்வையாளர்களை பதைபதைக்க வைத்துவிடுவார். 


ரஜினிகாந்த் - வடிவேலு காமெடி ட்ராக் :


ரஜினிகாந்த் - வடிவேலு காமெடி இன்றும் எவர்க்ரீன் ரகத்தை சேர்ந்தது. 'மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு' என்ற டயலாக் இன்றும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்றாக கலந்து விட்டது. சந்திரமுகி படத்தில் இவர்களின் காம்போ படு சூப்பராக ஒர்க் அவுட்டானது. இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. 


 



லாஜிக் ஒர்கவுட் ஆனது : 


வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரையில் பார்வையாளர்களை பரபரப்புடன் வைத்திருந்ததே இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். பாம்பு லாஜிக் நிஜமாகவே பலரை அச்சுறுத்தியே வைத்திருந்தது. ஜோதிகாவின் பிளாஷ்பேக் ஸ்டோரியும் அந்த கசப்பான அனுபவத்தால் அவரின் பாதிக்கப்பட்ட மனநிலை எந்த அளவுக்கு சந்திரமுகி என்ற கற்பனை உலகத்தில் கொண்டு சென்றது என்பதற்கான விளக்கமும் அதை செயல்படுத்திய  விதமும் பார்வையாளர்களையும் ஈர்த்தது. அதுவே படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் அமைந்தது. இன்றும் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரைட் பேயாக இருப்பது சந்திரமுகி மட்டுமே.  


18 ஆண்டுகள் காத்திருப்பு :


சுமார் 890 நாட்கள் ஓடிய ஒரே தென்னிந்திய திரைப்படம், ஹிந்தி, தெலுங்கு, ஜெர்மன், துருக்கி, போஜ்புரி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான படம், தென் ஆப்ரிக்காவில் கூட 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிய படம், ஜப்பானில் வசூல் வேட்டை செய்த படம் என எக்கச்சக்கமான சாதனையை செய்த சந்திரமுகி படத்தின் பார்ட் 2 எப்போ வரும் எப்போ வரும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு 18 ஆண்டுகளுக்கு பிறகே பூர்த்தியாகி உள்ளது.  


 



ஒரே லிங்க் வடிவேலு :


லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா மற்றும் பலர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகியுள்ளது. சந்திரமுகி 1ல் இருந்து பார்ட் 2விற்கு கடத்தப்பட்டவர்கள் என்றால் அது இயக்குநர் பி. வாசு  மற்றும் வைகை புயல் வடிவேலு மட்டும் தான். மற்றப்படி டோட்டல் டீமே மாறிவிட்டது. 


ஜாம்பவான்களின் கூட்டணி :


கொஞ்ச காலம் அல்ல 18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு இன்று வெளியாகும் சந்திரமுகி 2 படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஏகபோகமாக நடைபெற்று வருகிறது. கலை இயக்குநர் தோட்டா தரணி, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு, ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி என மிக பெரிய ஜாம்பவான்கள் கூட்டணி சேர்ந்துள்ள இந்த ஹாரர் கலந்த காமெடி ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படம் ரசிகர்களை கவரும் என்பது படக்குழுவினரின் நம்பிக்கையாக உள்ளது. 


சந்திரமுகி 2 படமும் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார், ஜோதிகா மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.