‘சென்சார் வாரியத்தின் வலியுறுத்தலின் பெயரில் லவ்வர் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஆபாச வார்த்தைகள் எவ்வளவு தெரியுமா


லவ்வர்


குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி,  ஹரிஷ் குமார்,  கீதா கைலாசம் , ஹரிணி , நிகிலா சங்கர்,  அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து நேற்று பிப்ரவரி 3 ஆம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது.


ஆபாச வார்த்தைகள்


குட் நைட் படம் இளைஞர்கள் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாடிய ஒரு படமாக அமைந்தது. இந்தப் படம் மணிகண்டனை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்தது. மணிகண்டனின் அடுத்தப் படத்தை அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து  இருந்த சூழலில் லவ்வர் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஷாக் கொடுத்துள்ளது.


ஒரு எளிய காதல் கதையை பின்னணியாக வைத்து லவ்வர் படம் உருவாகியிருக்கிறது. காதலில் ஆணுக்கும் பெண்ணுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகள் இந்தப் படத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கோபக்கார இளைஞனாக மணிகண்டனும் அவரைவிட பொருளாதாரத்தில் உயர்ந்தவராக அவரது காதலியாக கெளரி பிரியா ரெட்டியும் நடித்துள்ளார். லவ்வர் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் இரண்டிலும் கதாநாயகனாக நடித்துள்ள மணிகண்டன் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் இந்த வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்கிற கருத்து ஒருபக்கம் முன்வைக்கப்பட்டாலும் மற்றொரு தரப்பினருக்கு கொஞ்சம் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.






இப்படியான நிலையில் லவ்வர் படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வார்த்தைகளை நீக்க அல்லது மியூட் செய்யக் கோரி சென்சார் வாரியம் வலியுறுத்தியுள்ளது. சென்சார் வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி லவ்வர் படத்தில் எக்கச்சக்கமான ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதில் ’மயிர்’ என்கிற வார்த்தையை மட்டும் மூன்று இடங்களில் பயன்படுத்திக் கொள்ள படகுழுவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதி இடங்களில் இருக்கும் வார்த்தைகளை மியூட் செய்ய வலியுறுத்தப் பட்டுள்ளது.