பொன்னியின் செல்வன் திரைக்கதை ஆசிரியர் இளங்கோ குமரவேலிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிந்த போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கிறார் இளங்கோ குமரவேல். இவர் அபியும் நானும், அழகிய தீயே என நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்ல திரைக்கதை ஆசிரியரும் கூட. அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இவர் திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு இவருடைய செல்போனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இவர் செல்போன் பேசியபடி பட்டினப்பாக்கம் நோக்கி நடந்து கொண்டிருந்தபோது பைக்கில் வந்த சில மர்ம நபர்கள் அவரிடம் செல்போன் பறித்தனர். அந்த செல்போன் விலையுயர்ந்த செல்போன் எனத் தெரிகிறது. தன்னிடம் செல்போன் பறித்த நபர்களை இளங்கோ குமரவேலும் சிறிது தூரம் துரத்தியுள்ளார். ஆனால் பைக் பறந்த மின்னல் வேகத்திற்கு அவரால் இயங்க இயலவில்லை. இதனையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


இளங்கோ குமரவேலை ஒரு நடிகராக சில ஆண்டுகள் மட்டும் தான் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு நாசர் இயக்கி நடித்த மாயன் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இவருக்கு இயக்குநர் ராதா மோகனின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்னர் ராதா மோகன் இயக்கிய பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அபியும் நானும் திரைப்படத்தில் ரவி சாஸ்திரி என்ற பிச்சைக்காரர் ரோலில் தன்னுடைய அசத்தலான நடிப்பில் அனைவரையும் கவர்ந்து இருந்தார்.


அதன் பின்னர் தமிழில் இவர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் இறுதியாக விக்ரம் திரைப்படத்தில் ஏஜென்ட் லாரன்ஸ் ஆக இவரை நீங்கள் பார்த்திருக்கலாம். பொன்னியின் செல்வன் படத்தில் நீங்கள் பங்கு மிகவும் முக்கியமானது. மணிரத்தினத்திற்கு முன்பே பொன்னியின் செல்வனை நடத்தி முடித்திய பெருமை இவருக்கு உண்டு ஆனால் இவர் அதை நாடகமாக நடத்தி முடித்திருக்கிறார்.


இவர் எழுதிய பொன்னியின் செல்வன் மேடை நாடகம் சென்னையிலும் மதுரையிலும் பட்டையை கிளப்பியது. பொன்னியின் செல்வன் திரைக்கதைக்கு இவருடைய நாடகம்தான் அடிப்படை.  பசுபதி ,நாசர் போன்ற புகழ் பெற்ற கூத்துப் பட்டறை நடிகர்களால்‌ நடிக்கப்பட்ட இந்த நாடகம் அப்போதே பெரும் பாராட்டு பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் திரைக்கதையை மணிரத்னம், ஜெயமோகனுடன் இணைந்து வடிவமைத்ததும் இவரே