நடிகை கெளரி கிஷனின் உடல் எடை குறித்து பத்திரிகையாளரின் கேள்வி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதர்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சுற்றி பத்திரிகையாளர் சூழ கெளரி கிஷனை மன்னிப்பு கேட்கும்படி அந்த பத்திரிகையாளர் கூறினார். ஆனால் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த கெளரி கிஷன் துணிச்சலாக அத்தனை பேரையும் எதிர்த்து பேசினார். இவ்வளவு சின்ன வயதில் அத்தனை பேர் முன் தனக்காக அவர் பேசிய விதம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
கெளரி கிஷன் உடல் எடை குறித்த சர்ச்சை கேள்வி
கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர். கடந்த சில நாட்கள் முன்பு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நாயகனிடம் கெளரி கிஷனை தூக்கி நடனமாடினீகளே அவரது உடல் எடை என்ன என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அப்போது இதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யாத கெளரி யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்த போது இது குறித்து பேசினார்.
இப்படியான நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கௌரி கிஷன், பத்திரிக்கையாளர் தன்னுடைய உடல் எடை குறித்து கேட்ட கேள்வியை கடுமையாக சாடினார். மூளை இல்லாதவர்கள் எப்படி நடப்பார்களோ அப்படித்தான் அந்த கேள்வி இருந்தது. யாரிடமும் அந்த கேள்வியை கேட்காதீர்கள். அந்த செய்தியாளரின் நம்பரை வாங்கி பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் தேவையில்லாத விவாதம் ஏற்படும் என தவிர்த்து விட்டேன் என தெரிவித்திருந்தார். எனினும் அந்த கேள்வியால் தான் மிகவும் அதிருப்தியடைந்ததாக தெரிவித்திருந்தார்.
கெளரி கிஷனை சுத்துபோட்ட பத்திரிகையாளர்கள்
அதர்ஸ் படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று நவம்பர் 6 ஆம் தேதி பிரசாத் லேபில் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதே பத்திரிகையாளர் தன்னைப் பற்றி கெளரி கிஷன் யூடியூபில் பேசியது தவறு என்று இதற்காக கெளரி கிஷன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசினார். தனது தரப்பை பேச முயன்ற கெளரி கிஷனை பேச விடாமல் அந்த பத்திரிகையாளர் மற்றும் பிற பத்திரிகையாளர்கள் தவறை அவர் பக்கம் திருப்பி விடுவதில் கவனமாக இருந்தனர். ஆனால் சற்றும் பொறுமை இழக்காமல் பயப்பட்டாமல் அனைவரது முன்னும் கெளரி கிஷன் தைரியமாக தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்
சோலோவாக சம்பவம் செய்த கெளரி கிஷன்
" இங்கு பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் இருக்கிறார்கள். என்னை பேச விடாமல் என்னை கார்னர் பண்றீங்க. அதர்ஸ் படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் குறித்து நீங்கள் எந்த கேள்வியும் கேட்கவில்லை. இந்த படத்திற்கும் என் உடல் எடைக்கும் என்ன சம்பந்தம் ? நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கமுடியாது. நீங்கள் தான் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். நீங்கள் கேட்ட கேள்வி முட்டாள் தனமானதுதான். இதே கேள்வியை நீங்கள் ஒரு நாயகனிடம் கேட்பீர்களா ? என தனது ஒவ்வொரு கேள்வியையும் சத்தமாகவும் தைரியமாகவும் கேட்டார் கெளரி கிஷன்
திரையுலகினர் பாராட்டுக்கள்
கெளரி கிஷன் இந்த பிரச்சனையை தனியாளாக கையாண்ட விதம் பற்றி ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டி பேசி வருகிறார்கள். பாடகி சின்மயி , இயக்குநர் ரத்னகுமார் , நடிகை குஷ்பு , இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் தென் இந்திய நடிகர்கள் சங்கம் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளன.