புராணத்தில் கடவுள்கள் பயன்படுத்தியதாக கூறப்பட்டிருக்கும் ஆயுதங்களிளேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் பிரம்மாஸ்திரம். இதனை மூன்று பாகங்களாக பிரித்து அவற்றை பாதுகாக்கும் பொறுப்பில் ஷாருகான், நாகார்ஜூனா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் உள்ளனர். இப்படி பிரித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாஸ்திரத்தின் பாகங்களை எப்படியாவது ஒன்று சேர்த்து, அதீத சக்தி ஒன்றை உயிர்த்தெழ வைக்கும் முயற்சியில் இறங்குகிறார் படத்தின் வில்லி ஜுனூன். அப்படி அந்த சக்தி மீண்டும் உயிர்த்தெழுந்தால் உலகிற்கே ஆபத்து காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுகின்றனர் பிரம்மாஸ்திரத்தின் பாதுகாவலர்கள். வில்லியின் இந்த பயங்கர திட்டங்களுக்கு தடையாக வருகிறார் சிவா என்ற இளைஞன். அவனுக்கும் பிரம்மாஸ்திரத்திற்கும் என்ன சம்மந்தம்? அந்த அதீத சக்தி யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது பிரம்மாஸ்த்ரா திரைப்படம்.
செப்டம்பர் 9 ம் தேதி வெளியான அத்திரைப்படம், கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில், பிரம்மாஸ்திரா திரைப்படத்தை ஒரு தரப்பினர் புறக்கணிக்கும் பிரச்சாரத்தை கையில் எடுத்தனர். இதையெல்லாம் கடந்து, வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்ற பிரம்மாஸ்திரா திரைப்படம், அனைவரிடத்திலும் சென்றடைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு படத்தயாரிப்பு நிறுவனத்திடம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 23 ம் தேதி சினிமா தினத்தை முன்னிட்டு அனைத்து திரைப்படங்களம் ரூ.75 க்கு டிக்கெட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம், பெரும்பாலான படங்கள் நல்ல வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், டிக்கெட் விலையை குறைத்தால் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது என்பதை அறிந்த பிரம்மாஸ்திரா தயாரிப்பு நிறுவனம், நவராத்திரி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
ஐநாக்ஸ் நிறுவனம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், செப்டம்பர் 26(இன்று) முதல் செப்டம்பர் 29 வரை நவராத்திரியை முன்னிட்டு ரூ.100க்கு பிரம்மாஸ்திரா டிக்கெட் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பின் படி, இந்தியா முழுவதும் உங்கள் அருகாமையில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் பிரம்மாஸ்திரா திரைப்படத்தை ரூ.100க்கு பார்த்து மகிழலாம். ரூ.100 ரூபாய் உடன் ஜி.எஸ்.டி. கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.