பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஓ மை காட் 2’ படத்தில் பல காட்சிகளை நீக்குமாறு தணிக்கைத்துறை உத்தரவிட்டுள்ளது.
உமேஷ் சுக்லா எழுதி இயக்கிய திரைப்படம் ‘ஓ மை காட்’. இப்படம் 2012ஆம் ஆண்டு வெளியாகி கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த படத்தில் மிதுன் சக்ரவர்த்தி , அக்ஷய் குமார், பரேஷ் ராவல், ஓம் புரி , கோவிந்த் நாம்தேவ் , பூனம் ஜாவர், பூஜா குப்தா மற்றும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
கடவுளை பெரிய வியாபாரமாகப் பார்க்கும் நாத்திகனான பரேஷ், மும்பைக்கு வெளியில் இருந்து மொத்தமாக எடுத்து வரும் சிலைகளை விற்பவராக வருவார். இதனிடையே அந்த நகரத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் பரேஷ் கடை சேதமடைகிறது. இது கடவுளின் செயல் என்று கூறி காப்பீட்டு நிறுவனம் அவரது கோரிக்கையை நிராகரிக்கிறது. இதனால் பரேஷ் கடவுள் மீது வழக்குத் தொடர்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இது வெளியான காலக்கட்டத்தில் ரசிகர்களிடம் பெரும் பேசு பொருளாக மாறியது.
இப்படியான நிலையில் 11 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாகியுள்ளது. அக்ஷய் குமார், பங்கஜ் திரிபாதி, யாமி கௌதம், அருண் கோவில், கோவிந்த் நாம்தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை அமித் ராய் எழுதி இயக்கியுள்ளார்.இதில் சிவபெருமானின் அவதாரமாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். இதன் டீசரும் சில வாரங்களுக்கு முன் வெளியானது. வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தியேட்டரில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தணிக்கைக் குழு பல காட்சிகளை நீக்க பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓ மை காட் 2 படத்தில் நிர்வாணக் காட்சிகள், ஆணுறை விளம்பர போஸ்டர்கள், கடவுளுக்கு மது பிரசாதம் தருவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இவை நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மகாகாலேஷ்வர் என்ற கோயிலில் தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இதில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என தலைமை அர்ச்சகர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் திட்டமிட்டபடி ஓ மை காட் 2 படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.