ஆரி..


தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆரி திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைசுழி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் நெடுஞ்சாலை, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் ஆரி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர்.


நடிகர் ஆரி சினிமாவைத் தவிர சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.



நெஞ்சுக்கு நீதி..


அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் ஆரி நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த படம் இயக்குனர் அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படம் ‘ஆர்டிக்கள் 15’ திரைப்படத்தின் ரீமேக்காகும். இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். படத்தில் நேர்மையான ASP அதிகாரியாக விஜயராகவன் என்ற கதாபத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு பிறகு அதிகம் பேசப்படுவது ஆரியின் கதாபாத்திரமும், சுரேஷ் சக்கரவர்த்தியின் வில்லத்தனமும்தான். படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த ஆரி, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது, ஒரு ஆழமான விமர்சனமே செய்துவிட்டார்.  



அருள்நிதிக்கு நன்றி


படம் பேசும் ஜாதி அரசியல் குறித்து பேசிய அவர், "ஒன்றை உயர்த்தி மற்றொன்றை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. முக்கியமாக ஜாதி அரசியல் படமல்ல. நிறைய பேர் இந்த படத்தின் கதையை கேட்டு வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று மறுத்திருக்கிறார்கள். குறிப்பாக அதர்வா, அருள்நிதி உள்ளிட்ட நடிகர்களுக்கு நன்றி." என்றார்.


சாதி இருக்கிறதா?


சாதி அரசியல் குறித்து பேசுகையில், "ஒரு வேலை அவர்கள் நடித்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னால் ஜாதி இருக்கு. ஆனால், இங்கு பெயருக்கு பின்னால் ஜாதி இல்லை. அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் இப்படி ஜாதியை தூண்டும் வகையில் படம் எடுக்கிறீர்கள்? என்று பலர் கேட்கிறார்கள். நாம் பெயரில் மட்டுமே ஜாதியை ஒழித்து விட்டோம். ஆனால், நம் மனதில் ஜாதி அப்படியேதான் இருக்கிறது. ஜாதியை வெளியில் சொல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், சமூக நீதி பற்றிய புரிதலோடு இருப்பது ரொம்ப முக்கியம். நாம் எந்த சாதியில் பிறந்தவன் என்பது பிரச்சினை அல்ல." என்றார்.



வசனம்


நாம எந்த சாதியில் பிறந்தோம் என்பது பிரச்சனை இல்லை. ஆனால் அந்த சாதி பெருமையோடு மற்றவர்களை இழிவாக பாக்கிறதுதான் இங்க பிரச்சனை. அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்த படம். இந்த படத்தை நம் வீட்டு குழந்தைகள் பார்க்க வேண்டும். அனைவரும் அவரவர் குழந்தைகளை அழைத்து வந்து இந்த படத்தை காண்பிக்க வேண்டும். முக்கியமான பல வசனங்கள் உள்ளன. வெளிநாட்டில் உள்ள பிச்சைக்காரன் ஆங்கிலம் பேசுவானா என்று உதயநிதியிடம் மகள் கேட்கும்போது அவர் சொல்ற பதில், மொழியை கத்துக்குறது தப்பில்ல, கத்துகிட்டே ஆகணும் ன்னு சொல்றதுதான் தப்புன்னு சொல்றதுன்னு படம் ஃபுல்லா நல்ல வசனங்கள் இருக்கு. 


பேரறிவாளனுக்கு நீதி


நெஞ்சுக்கு நீதி தலைப்பு குறித்து பேசுகையில், "இந்த படத்துக்கு இதை விட சிறந்த தலைப்பு இல்ல. இங்க எல்லாமே நீதிக்கான போராட்டம்தான். இப்போ கூட நம்ம பாத்தோம், பேரறிவாளனுக்கு காலதாமதமாக கிடைத்த நீதியை. நீதி என்பது அந்தந்த நேரங்களில் கிடைப்பது தான். அதற்காகத்தான் பெரியாரும், அம்பேத்கரும் போராடினாங்க. அவங்க ஜாதி தலைவர்கள் இல்லை, அதைத்தான் இந்த படம் உணர்த்துது." என்றார்.