இந்தியில் ஹிட்டான 'ஆர்டிக்கிள் 15' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் படம் குறித்தும், அடுத்த கட்ட நகர்வுகள் உட்பட பல்வேறு கேள்விகளுக்கும் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அவர் பேட்டியிலிருந்து: பொதுவாகவே என் குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் தொடர்பு உண்டு. தாத்தா, அப்பா என எல்லோருக்கும் சினிமாவில் நாட்டம் இருந்ததால் இயல்பாகவே எனக்கும் அந்த நாட்டம் வந்துவிட்டது. நான் 2012ல் ஓகேஓகேவில் நடித்தேன் இப்போது சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2022ல் நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் காமெடி மட்டும் என்று ஆரம்பித்து இப்போது நல்ல கனமான கதைகளில் நடித்து வருகிறேன். முதலில் நான் மிஷ்கின் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது. அப்போது பாஸ் என்ற பாஸ்கரன் இயக்குநர் ராஜேஷ் அறிமுகம் கிடைத்தது. அவருடைய சிவா மனசுல சக்தி கதை பிடிக்கும் என்றேன். அதே பாணியில் ஒரு கதை இருக்கு என்றார். அப்படி அமைந்தது தான் ஓகே ஓகே.
மனிதன் படம் ஒரு திருப்புமுனை என்பேன். அதன் பிறகு என் சினிமா வாழ்வில் ஒரு சேஞ்ச் வந்தது. ஏற்கெனவே பேசிவைத்திருந்த படத்தை மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மிஷ்கினுடன் இணைந்து செய்தேன். அதுதான் சைக்கோ. ஆர்டிக்கிள் 15 அமைந்ததும் எதிர்பாராதது தான். ஒரு நாள் போனி கபூர் சார் ஃபோன் செய்தார். அப்போது அவர் என்னை சந்திக்க வேண்டும் என்றார். இருவரும் சந்தித்தோம் ஆர்டிக்கிள் 15 , அத்துடன் ஒரு காமெடி கதை என இரண்டு கதைகள் சொன்னார். நான் காமெடி வேண்டாம் என்றேன். அதனால் ஆர்டிக்கிள் 15-ஐ எடுக்க திட்டமிட்டோம். யார் இதை இயக்குவது எனத் தேடியபோதுதான் அருண்ராஜா காமராஜ் இதற்கு ஃபிட் ஆவார் என்று எங்களுக்கு நம்பிக்கை வந்தது. அருண்ராஜ் சமரசமே ஆகமாட்டார். காட்சிகள் சரியாக வரும் வரை டேக் சொல்லிகிட்டே இருப்பார். ஒன்மோர் டேக் என்று சொல்லிச்சொல்லியே நிறைய காட்சிகள் நடித்தேன்.
அவர்தான் அப்படி என்றால் மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ் இன்னும் அதிகமாக ட்ரில் வாங்குகிறார். சின்ன சின்ன நுணுக்கங்கள் கூட அவர் சொல்லித் தந்து வேலை வாங்குகிறார். படம் நன்றாக வரும் என நாங்கள் நம்புகிறோம். அநேகமாக மாமன்னன் படம் தான் என் கடைசிப் படமாக இருக்கும். அதற்கு மேல் அரசியலில் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இன்னும் இதுகுறித்து தீர்க்கமாக முடிவு செய்யவில்லை. இருந்தாலும் மாமன்னன் கடைசி படமாக இருக்கலாம்.
அப்புறம் நான் மட்டும் தான் எல்லா படங்களையும் வாங்கி விநியோகிப்பதாக செய்திகள் வருகின்றன. அது உண்மையல்ல. பேட்டைக்கு அப்புறம் எங்களுக்கும் சன் பிக்சர்ஸுக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி வெளியீடுகள் நடப்பதால் நிறைய படங்களை வெளியிடுவதுபோல் தெரிகிறது. வேண்டுமென்றால் நான் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு எந்த படமுமே வெளியிடாமல் இருந்துவிடுகிறேன். அப்போதாவது இதுபோன்ற பேச்சுகள் ஓய்கின்றனவா எனப் பார்ப்போம்.