கார்ட்டூன் நெட்வர்க் (Cartoon Network)


1992 ஆம் ஆண்டு பெட்டி கோஹன் என்பவரால் தொடங்கப்பட்டது கார்ட்டூன் நெட்வர்க் சேனல் . சிறுவர்களுக்கான பல்வேறு அனிமேஷன் தொடர்களை உருவாக்கி வருகிறது. 90 களில் தங்கள் பால்ய பருவத்தை கழித்தவர்கள் இந்த சேனலில் வரும் அத்தனை நிகழ்ச்சிகளையும் இன்று அப்படியே பட்டியலிடும் அளவிற்கு எல்லாவற்றையும் மனப்பாடம் செய்துவைத்துள்ளனர். பவர்பஃப் கர்ல்ஸ் , டீன் டைட்டன்ஸ் , ஜானி பிராவோ , டெக்ஸ்டர் , பென் 10 ,  உள்ளிட்ட பல்வேறு பிரபல அனிமேஷன் தொடர்களை உருவாக்கிய கார்ட்டுன் நெட்வர்க் சேனல் தற்போது மூடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து RIP Cartoon Network என்கிற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.






ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு வருகிறார்கள்.


ஊசலாடும் அனிமேஷன் கலைஞர்கள்






எக்ஸ் தளத்தில் உள்ள Animation Workers Ignited என்கிற தளத்தில் இந்த தகவல் முதன்முதலாக பதிவிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றி வந்த எண்ணற்ற அனிமேஷன் கலைஞர்கள் வேலையில்லாமல் தவிப்பதாகவும் தயாரிப்பு நிறுவனங்களில் பேராசையால் நுற்றுக்கணக்கான தொழிலாளிகள் தங்கள் வேலையை இழந்து நிற்பதாகவும் இந்த பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.


கொரோனா நோய் தொற்று பரவலின்போது உலகமே தங்கள் வீட்டிற்குள் ஒதுங்கிக் கிடந்தபோது இருந்த இடத்தில் இருந்தே அனிமேஷன் கலைஞர்கள் தனித்தனியாக வேலை செய்து வந்தார்கள். ஆனால் தற்போது இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் ஸ்டுடியோக்கள் தங்களிடம் வேலை செய்துவந்த அனிமேஷன் கலைஞர்களை பணி நீக்கம் செய்துவிட்டு தற்காலிகமாக ஆட்களை நியமிக்கிறது.


அலுவலக மேலாண்மை போன்ற நிர்வாக செலவுகளை குறைக்கும் பேராசையில் ஸ்டுடியோக்கள் இந்த முறையை பின்பற்றி வருவதாக இந்த எக்ஸ் பக்கம் குற்றம்சாட்டியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனிமேஷன் கலைஞர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.