தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 


சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி நல்ல பெயரை மட்டுமே சம்பாதித்தவர்கள் தனித்தனியே இருக்கிறார்கள். ஆனால், இரண்டிலும் நல்ல பெயரைமட்டும் சம்பாதித்தவர் என்றால் அது விஜயகாந்த் தான். 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை திரைப்படம் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். ஆனால் 1980 ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் படம் தான் அவரை அனைவரிடத்திலும் பரீட்சையமாக்கியது. 


சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் விஜயகாந்த், சினிமா என்னும் கலையை வசூலுக்காக மட்டும் என்றல்லாமல் எல்லா தரப்பு மக்களும் பயனடையவேண்டும் என்று நினைத்தவர் . தனக்கு போட்டியாக கருதப்பட்ட சக நடிகர்களையும் அனுசரித்து அரவணைத்து சென்றதால் இன்றும் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக விஜயகாந்த் உள்ளார். 1984 ஆம் ஆண்டில் மட்டும் விஜயகாந்த் 18 படங்களில் நடித்து சினிமாத் துறையில் சாதனைப் படைத்தார். 






1999 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை கலை நிகழ்ச்சிகள் மூலம் அடைத்ததோடு மட்டுமல்லாமல்,  நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தினார்.  தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொண்ட பற்றால் தனது 100வது படத்துக்கு கேப்டன் பிரபாகரன் என்றும், தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்றும் பெயர் சூட்டினார். 


தொடர்ந்து அரசியலிலும் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றி பெற்று அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உள்ளார். இதனிடையே விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மாலை அணிந்தவாறு சேரில் அமர்ந்திருக்கும் விஜயகாந்த்தை சுற்றி மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய  பிரபாகரன்,சண்முக பாண்டியன்,  மைத்துனர் சுதீஷ் ஆகியோர் உடனிருக்கின்றனர். 


உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருக்கும் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்றும் மீண்டும் வர வேண்டும் என ரசிகர்கள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.