‘திருச்சிற்றம்பலம்’ பட வெற்றிக்குப் பிறகு வரிசைக்கட்டி படங்களில் நடித்து வரும் தனுஷ், ராக்கி, சாணி காயிதம் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் முதன்முதலாக கூட்டணி வைத்திருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. 


சத்யஜோதி ஃபிலிம்ஸ் உடன் தனுஷ் மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார். சென்ற ஆண்டு மத்தியில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், தொடர்ந்து படத்தின் மோஷன்  போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமானார்.


தொடர்ந்து நிவேதிதா, ஜான் கோக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார், சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.  ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வந்தது.



1930களின் மெட்ராஸ் ப்ரெசிடென்சியை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகவும்,  2023ஆம் ஆண்டு தனுஷ் ரசிகர்களுக்கு சம்மர் ட்ரீட்டாக இப்படம் வெளியாகும் எனவும் முன்னதாக அறிவிப்புகள் வெளிவந்தன.



இந்நிலையில், இன்று படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி தனுஷ் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.


 






தென்காசியில் படக்குழுவினரின் அசுர உழைப்பில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் பணிகளில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.


முன்னதாக கேப்டன் மில்லர் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி தனுஷ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், இந்த மேக்கிங் வீடியோ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


தனுஷின் வாத்தி படமும் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஒருபுறம் தனுஷ் தன் 50ஆவது படத்துக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறார். இந்தப் படத்தை தனுஷ் தானே தயாரித்து இயக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக கேப்டன் மில்லர் பட ஷூட்டிங்கில் முழுவீச்சில் கலந்துகொண்டு, 80 நாள்கள் கால்ஷீட் வழங்கியுள்ளதாகக்த் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 






முன்னதாக கேப்டன் மில்லர் படத்தில் சாட்டிலை மற்றும் ஓடிடி உரிமம் 120 கோடிக்கு விற்பனையானதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.