நடிகர் தனுஷை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவருக்காக எதையும் எந்த நேரத்திலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் நடிகர் சிவ்ராஜ் குமார் தெரிவித்துள்ளார். 


நடிகர் தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” படம்  பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடரி, பட்டாஸ்,மாறன் ஆகிய படங்களுக்குப் பின் மீண்டும் சத்யஜோதி நிறுவனம் தனுஷை வைத்து படம் தயாரித்துள்ளது. இந்த படத்தை ராக்கி, சாணி காயிதம் படம் எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவ்ராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


இதனிடையே சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அப்போது பேசிய சிவ்ராஜ்குமார், “நான் அருண் மாதேஸ்வரனிடம் முதலிலேயே சொன்னேன். நீங்கள் கதை எல்லாம் சொல்ல வேண்டாம். தனுஷ் நடிக்கிறார் என்றால் நான் நடிக்கிறேன் என தெரிவித்தேன். இதை ஜோக்குக்காக சொல்லவில்லை. எனக்கு தனுஷை அவரது முதல் படத்தில் இருந்தே பிடிக்கும். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான். இதை நான் பலமுறை சொல்லிருக்கேன். அவரை பார்க்கும்போதெல்லாம் என்னை பார்க்கிற மாதிரியே இருக்கும். தனுஷ் ஒரு எளிமையான சூப்பரான நடிகர் என்றால் அது தனுஷ் தான். சமீபத்தில் அவர் நடித்த வாத்தி படம் பார்த்தேன்.


தனுஷின் நடிப்பு, குரல் இவ்வளவு ஏன் எனக்கு தனுஷ் என்றாலே பிடிக்கும். குற்றாலத்துல நடந்த ஷூட்டிங் டைமில் என்னுடைய மனைவி வந்திருந்தார்கள். அப்போது என்னுடைய ரூமை கிச்சனாக மாற்றி விட்டார்கள். அங்க பிரியாணி, கேக்,  இறைச்சி சமைக்கிறது என செய்வார்கள். தனுஷ் அசைவம் எல்லாம் சாப்பிட மாட்டார். அவருக்காக தனியாக சைவ சாப்பாடு எல்லாம் செய்வார்கள்.  ஒருநாள் அவரின் இரு மகன்களும் வந்திருந்தார்கள். கிரிக்கெட் எல்லாம் விளையாடினோம். எப்போதும் கூப்பிட்டாலும் நான் உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் வருவேன்.






நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். நீங்கள் ஒரு கேரக்டருக்காக மாற்றம் காண்பது பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் என சொல்வதை விட, உலக சினிமா அரங்கில் சிறந்த நடிகர் என்றே சொல்லலாம்,  இதே மாதிரி தொடர்ந்து நடிக்க வேண்டும். கேப்டன் மில்லர் படம் உங்க எல்லாருக்கும் பிடிக்கும்ன்னு நான் நம்புறேன். ஜனவரி 12 ஆம் தேதி படத்தை பார்த்து மகிழுங்கள். அதேசமயம் ஜெயிலரில் பார்த்து என்மேல் அன்பை பொழிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார். தொடர்ந்து தனுஷூடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.