நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 


சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார், விஜி சந்திரசேகர் என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரீலிஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. தொடர்ந்து ஜனவரி 6 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லரானது வெளியானது. இந்த படத்தின் மேக்கிங் பார்க்கும்போது ஹாலிவுட் தரத்துக்கு இணையான காட்சிகள் இடம் பெற்றுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்ட கேப்டன் மில்லர் படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.மிருகத்தனமாக உழைப்புக்கு சொந்தக்காரர் அருண் மாதேஸ்வரன். அவரும், படக்குழுவும் உழைத்ததெல்லாம் பார்க்கும்போது நான் வேலை பார்த்தேன் என சொல்லவே கூச்சமா இருக்கு” என சொன்னார். 


மேலும், அருண் மாதேஸ்வரனை பார்க்கும்போது எனக்கு வெற்றி மாறன் நியாபகம் தான் வருகிறது. கேப்டன் மில்லர் படத்தின் கதை சொல்லும் போது பெரிய அளவில் நான் கேட்ட கேள்விக்கெல்லாம் அவர் பதில் பேசவில்லை. ஆனால் படம் பார்த்துவிட்டேன். அருண் மாதேஸ்வரன் சம்பவம் பண்ற கைன்னு புரிந்தது” என கூறினார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 






இதனிடையே கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ்குமார் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பின்னணி இசை மற்றும் இசைக்கோர்ப்பு பணிகள் முடிவடைந்தது. இந்த படம் ஃபயர் ஆக உள்ளது. தனுஷின் இண்ட்ரோ மியூசிக் திரையில் காண ஆவலாக காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தனுஷ் - ஜி.வி.பிரகாஷ்குமார் கூட்டணி பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம், அசுரன், வாத்தி உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Actor Dhanush: நல்லவேளை நான் முந்திகிட்டேன் .. கேப்டன் மில்லர் விழாவில் தனுஷ் சொன்ன சீக்ரெட் தகவல்