தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கிவரும் இயக்குநர் அருண் மாதேஸ்வரனைத் தொடர்ந்து இயக்குநராக உருவெடுக்க இருக்கிறார் அவரது மனைவி ரஞ்சனி மாதேஷ்வரன்.


அருண் மாதேஸ்வரன்


ராக்கி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். ரவுட் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்தது. வசந்த் ரவி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனை வைத்து சாணிக் காகிதம் படத்தை இயக்கினார். இந்தப் படம் அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. வித்தியாசமான கதை சொல்லல் முறையை கையாளும் அருண் மாதேஸ்வரன் தனது மூன்றாவது படத்தை தற்போது இயக்கிவருகிறார்.


கேப்டன் மில்லர்


தனது முதல் இரண்டு படங்களில் குறிப்பிட்ட ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட அருண் மாதேஸ்வரன் தற்போது தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார். வரலாற்றுக் கதையை பின்புலமாகக் கொண்டு தனுஷின் கரியரில் மிக முக்கியமான படமாக உருவாகி வருகிறது இந்தப் படம். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பெரியளவிலான மக்களால் அருண் மாதேஸ்வரன் கொண்டாடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஞ்சனி மாதேஸ்வரன்


அருண் மாதேச்வரனைத் தொடர்ந்து அவரது மனைவியான ரஞ்சனி மாதேஸ்வரன் தற்போது இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். திருநெல்வேலியை மையமாகக் கொண்டஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார் ரஞ்சினி. கன்னடத் திரைப்பட நிறுவனமான கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தமிழில் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழில் அறிமுகமாகிறார் கார்த்திக் கெளடா. இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.






இயக்குநரை புகழ்ந்து தள்ளிய தயாரிப்பாளர்


ரஞ்சனி இயக்கும் படத்தைத் தயாரிக்க இருக்கும் கார்த்திக் கூறியதாவது “நான் கேட்டதிலேயே மிகச் சிறந்த ஒரு ஆக்‌ஷன் கதையை ரஞ்சனி எனக்கு சொன்னார். இது எங்கள் தயாரிப்பு நிறுவனமான கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸின் முதல் தமிழ் படம். முழுக்க முழுக்க திருநெல்வேலியில் நடக்கும் கதைக்களம். படத்தைக் குறித்தான கூடுதல் தகவலை விரைவில் வெளியிடுவோம்” எனப் பேசியுள்ளார்.


கேப்டன் மில்லர்


தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம்  அமோக வரவேற்பைப் பெற்றது. வரும் ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றையும் வெளியிட இருக்கிறது படக்குழு.


  மேலும் படிக்க : Oppenheimer Review: நொடிக்கு நொடி பதட்டம்... வரலாற்றை கண்முன் நிறுத்தும் காட்சிகள்... கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஒரு திரைக்காவியம்!