1952 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட திரைப்பட தணிக்கைச் சட்டத்தை திருத்தி, புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023-ஐ அறிமுகப்படுத்துவதற்கான தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய  தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் அமைச்சர் அனுராக் தாக்கூர், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். 


சட்டமசோதாவில் சொல்லப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்


* திரையரங்குகளில் கேம்கார்டிங் மூலம் திரைப்படங்கள் நகலெடுக்கப்படுவதையும், அங்கீகரிக்கப்படாத  ஒளிபரப்பு செய்வது போன்றவற்றை தடுக்க, கடுமையான தண்டனை விதிகள் இந்த சட்ட  மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையதளங்களில் படங்கல் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்க முடியும். 


* தற்போது உள்ள  UA வகை சான்றிதழை மேலும் மூன்று வயது அடிப்படையிலான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது. ஏழு ஆண்டுகள் (UA 7+), 13 ஆண்டுகள் (UA 13+), மற்றும் 16 ஆண்டுகள் (UA 16+) என தணிக்கை செய்யப்படும். இது குழந்தைகள் அத்தகைய படத்தைப் பார்க்க வேண்டுமா என்பதைப்  பெற்றோர்கள் பரிசீலிக்க மட்டுமே பரிந்துரைக்கப்படும். 


* மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சான்றிதழ்களின் செல்லுபடி காலம் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே என்ற  தடையை நீக்குதல் 


* தொலைக்காட்சி ஒளிபரப்பிற்காக திருத்தப்பட்ட திரைப்படத்தின் மறுசான்றிதழ் வழங்கப்படும்.  தடையற்ற பொதுவான திரைப்படங்கள் மட்டுமே தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும்.



எதிர்ப்பு தெரிவித்த பிரபலங்கள் 


ஏற்கனவே இந்த சட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஏற்கனவே திரைத்துறையில் கருத்து சுதந்திரத்தில் அரசின் தலையீடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது கலைத்துறையின் குரலை நெறிக்கும் வகையில் இருப்பதாக பிரபலங்கள் பலரே வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். 


இந்த சட்டத்தின் மூலம் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பின் படங்கள் வெளிவருவதற்கு முன்பு, சான்றிதழுக்கு ஏற்றவாறு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு தலையிட முடியும். அந்த சான்றிதழ்களில் மாற்றங்கள் செய்யவும், தேவைப்பட்டால் அந்த சான்றிதழை ரத்து செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் கிடைக்கும்.


அதேசமயம் தணிக்கை குழுவால் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்  எழுந்தால் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை படைப்பாளிகள் அணுகலாம் என்ற நிலை இருந்தது. இதனை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த தீர்ப்பாய சட்டத்தின்படி  கலைக்கப்பட்டதால்  தணிக்கைக்குழு பிரச்சினைகளை தாண்டி நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற வாதமும்  முன்வைக்கப்பட்டது. 


இதனை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும், நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் போன்ற திரையுலகினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  1,400 திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட திரையுலக கலைஞர்கள் இந்த வகையான சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால்  தற்போது இந்த சட்ட மசோதாவின் முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.