சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்கா பூர்வாலாவை நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. அதேநேரம், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொலிஜியம் பரிந்துரை:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலாவை நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இவர் தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். அதோடு, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கட்டாயம் தலைமை நீதிபதி தேவை எனவும் மத்திய அரசுக்கு கொலிஜியம் வலியுறுத்தியுள்ளது.
யார் இந்த கங்கா பூர்வாலா?
1962ம் ஆண்டு பிறந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா, 1985ம் ஆண்டு தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார். தொடர்ந்து, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பாம்பே மெர்சண்டைல் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களுக்கு வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார். தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். டிசம்பர் 2022 இல், அப்போதைய தலைமை நீதிபதி தீபாங்கர் தத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுபெற்றதை அடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா செயல்பட்டு வருகிறார்.
டி.ராஜா கோரிக்கை நிராகரிப்பு:
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள ராஜாவை, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கடந்தாண்டு நவம்பர் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால், விரைவில் தான் ஓய்வு பெற உள்ளதை குறிப்பிட்டு பணியிட மாற்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதி ராஜா சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், அவருடைய கோரிக்கை மீண்டும் கொலீஜியத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிபதி டி ராஜாவை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்த பரிந்துரையில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக கொலிஜியம் கூறியுள்ளது.
6 மாதங்களாக காலியாக உள்ள பொறுப்பு:
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதியதாக தலைமை நீதிபதியாக யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்பட்டு வந்தார். அவரும் ஓய்வு பெற்றதை தொடர்ந்து டி ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். அதாவது வரும் மே மாதம் இவர் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் தான் அவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இந்நிலையில் தான் ஆறு மாத காலத்திற்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்திற்கான தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்கா பூர்வாலாவை நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. அதேநேரம், பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜாவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
யார் இந்த கொலிஜியம்:
இந்தியாவில் உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த கொலிஜியம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகளான சஞ்சய் கிஷன் கவுல், எம் ஜோசப், எம்ஆர் ஷா மற்றும் அஜய் ரஷ்டோகி ஆகியோருடன் செயல்பட்டு வருகிறது. நீதிபதிகள் நியமன விவகாரத்தில் இந்த கொலிஜியத்திற்கும் - மத்திய அரசுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.