வைபவ் நடிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வெளியான பபூன் திரைப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.   


கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அசோக் வீரப்பன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "பபூன்". இப்படத்தில் வைபவ், அனகா, நரேன், ஆத்தங்குடி இளையராஜா, ஜோ ஜார்ஜ், தமிழ், கனகராஜ்  உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 


 



கதை சுருக்கம்:


நாடக கலைஞரான வைபவ், நாடகத்திற்கு இருக்கும் வரவேற்பு குறைந்த காரணத்தால் வருமானம் இன்றி தவிப்பதால் வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார். அதற்கு பணம் தேவைப்படுவதால் தவறுதலாக கடத்தல் கும்பலிடம் மாட்டி கொள்கிறார். அங்கு இருந்து தப்பிக்கும்போது போலீசிடம் பிடிபடுகிறார். கடைசியாக அவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்ன நடக்கிறது என்பதுதான் பஃபூன் படத்தின் கதை. 






கலவையான விமர்சனம்:


எதார்த்தமாக நடிப்பதில் தேர்ந்தவரான வைபவ் இப்படத்தில் தேவைக்கேற்ப அளவாக நடித்து இருந்தார். ஹீரோயின் அனகாவும் ஒரு இலங்கை அகதியாக சிறப்பாக நடித்திருந்தார். படத்தின் கதை அங்கும் இங்கும் அலையாமல் கதையினுள் மட்டுமே பயணித்தது சிறப்பு. வில்லனாக நடித்திருக்கும் நரேன் கலக்கலாக நடித்திருந்தார். ஒரு சாதாரண மனிதன் தனக்கு ஏற்படும் சிக்கலில் இருந்து எப்படி  மீண்டு வருகிறான் என்பதை சுவாரஸ்யம் கலந்து படமாக்கியுள்ளார் அசோக் வீரப்பன்.  இந்த அரசியல் கலந்த திரில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருந்தது.






ஓடிடி ரிலீஸ் :


செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பஃபூன் திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக தயாராகிவிட்டது. அக்டோபர் 14-ஆம் தேதி முதல் பபூன் திரைப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதை போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.