எந்த காலகட்டமாக இருந்தாலும் செண்டிமெண்ட் படங்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமே இருக்காது. அம்மா - மகன், அப்பா - மகள், அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி இப்படி பல பாசத்தை பொழிந்த பாசமலர் படங்களை போலவே, அண்ணன் - தம்பி பாசத்தை பறைசாற்றிய பல படங்களும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளியாகி வந்துள்ளது. சகோதரர்கள் தினமான இன்று தமிழ் சினிமாவில் வெளியான வித்தியாசமான அண்ணன் - தம்பி பாசம் பற்றிய படங்களை பார்க்கலாம் :
வானத்தை போல :
2000ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த், மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன், வினிதா, கௌசல்யா மற்றும் பலரின் நடிப்பில் வெளியான இப்படத்தில் தம்பிகளுக்காக அண்ணன் திருமணமே செய்து கொள்ளாமல் தியாக செம்மலாக வாழ்வதை காட்டிய படம். சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இப்படம் 250 நாட்களையும் தாண்டி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.
சமுத்திரம் :
2001ம் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சரத்குமார், முரளி, மனோஜ், காவேரி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அண்ணன் தம்பிகள் மூவரும் அவர்களின் செல்ல தங்கையை மகாராணி போல வளர்க்க அவள் திருமணத்திற்கு பிறகு கஷ்டப்படுவதை பார்த்து மனம் பொறுக்காமல் அவளுடைய வாழ்க்கையை சரி செய்வதற்காக சிரமப்பட்டு சீர் செய்கிறார்கள். தங்கைக்காக அண்ணன்கள் மூவரும் ஒன்று சேர்ந்து போராடிய இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
வாலி :
1999ம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத அண்ணன் அஜித் தனது இரட்டைப் பிறவியான தம்பி அஜித்தின் மனைவியை அடைய துடிப்பதும் அதற்காக தம்பியையே கொல்ல துணியும் அண்ணனாக நெகட்டிவ் கேரக்டரில் வெகு சிறப்பாக நடித்திருப்பார் நடிகர் அஜித். இரட்டை கதாபாத்திரத்தில் அஜித் நடித்த இப்படம் சூப்பர் சூப் ஹிட் அடித்தது.
ஆண்பாவம் :
1985ம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கி நடித்த இப்படத்தில் பாண்டியன், சீதா, ரேவதி, ஜனகராஜ், வி.கே. ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அண்ணனின் காதல் ஜெயிப்பதற்காக ரிஸ்க் எடுத்து தம்பி அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்க அவர் படும்பாட்டை காமெடி கலந்து மிகவும் அருமையாக காட்சிபடுத்திய இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
வேட்டை :
2011ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆரிய, அமலா பால், சமீரா ரெட்டி, நாசர் மற்றும் பலர் நடித்த இப்படத்தில் பயந்த சுபாவம் கொண்ட போலீஸ் அண்ணனுக்காக கிரிமினல்களை பழிவாங்குகிறார் தம்பி. ஆள்மாறாட்டம் செய்யும் ஆர்யா - மாதவன் பாசபிணைப்பு ரசிகர்களை கவர்ந்தது.
காக்கா முட்டை :
2014ம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தில் குப்பத்தில் வாழும் அண்ணன், தம்பி இருவரும் பிட்சா சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை வர அதை கடந்து எப்படி தங்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது தான் கதைக்களம்.