பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைபப்டத்தில் ஹாலிவுட் நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


விக்ரம் டிவிட்டர் பதிவு:


இதுதொடர்பாக நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”வேட்டைக்காரனான டேனியல் கால்டகிரோனை தங்கலான் திரைப்படத்திற்கும், சமூக ஊடகங்களின் தொகுப்புகளுக்கும் வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதில் கையில் கூரிய ஆயுதத்துடன், தோளில் துப்பாக்கியை மாட்டிக்கொண்டு, வேட்டைக்காரரை போன்று சற்றே வயதான தோற்றத்திலான டேனியல் கால்டகிரோனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.


யார் இந்த டேனியல் கால்டகிரோன்:


டேனியல் கால்டகிரோன் இங்கிலாந்து நடிகர் ஆவார். 50 வயதான இவர், தி பீச் , லாரா கிராஃப்ட் டோம்ப் ரைடர்: தி க்ரேடில் ஆஃப் லைஃப் மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற தி பியானிஸ்ட் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானாவர். லாக் ஸ்டாக் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.


தங்கலான் திரைப்படம்: 


பா.ரஞ்சித் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள விக்ரம், தங்கலான் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால், ஏற்கெனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  மேலும் இந்தப் படத்தில் பார்வதி, பசுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் பிரிட்டிஷ் நடிகர் ஒருவர் இணைந்திருப்பதன் மூலம், தங்கலான் திரைப்படம் ஆங்கிலேயர்கள் காலகட்டத்தில் நடைபெறும் ஒரு கதைக்களம் என்பது உறுதியாகியுள்ளது.


தங்கலான் திரைப்படத்தில் மாளவிகா மோகனன்:


கிரிஷ்டி படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனனும், தங்கலான் படத்தில் இணைந்துள்ளார். இந்த படம் குறித்து பேசிய அவர், க்ரிஸ்டி படத்தில் இருந்து தங்கலான் படத்துக்குச் சென்று அனைத்து நேர் எதிரான விஷயங்களை செய்ய வேண்டியிருந்தது. நான் மேலும் தைரியசாலியாகவும் உறுதியாகவும் கோபக்காரியாகவும் போர் வீராங்கனையாகவும் செயல்பட வேண்டி இருந்தது.


ரஞ்சித் சார் மிகவும் உறுதியான நபர். அவர் தனக்கு வேண்டியதைப் பெறும் வரை உங்களை விட மாட்டார். அது மிகவும் சிறப்பான விஷயம், நான் அதை ரசிக்கிறேன். தங்கலான் விக்ரம் சாரின் படம். அவர் மிகப்பெரும் நடிகர். ஆனால் அப்படத்தில் எனக்கும் மிகச்சிறந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. மேலும் தங்கலான் படம் பா.ரஞ்சித் போன்ற சிறப்பான இயக்குநரைக் கொண்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் திரும்பிப் பார்த்தால் இந்த படம் செய்ததற்கு நிச்சயம் வருந்த மாட்டேன். அவ்வளவு சிறப்பான கதாபாத்திரம் அது” எனத் தெரிவித்துள்ளார்.