பிரபல வெப் சீரிஸ் தொடரான பிரேக்கிங் பேட் தொடரில் நடித்த நடிகர் மைக் படாயே திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை 62 எபிசோட்களாக ஒளிபரப்பான பிரேக்கிங் பேட் வெப் சீரிஸில் லாவண்டேரா பிரில்லேண்டே தொழில் துறையின் மேலாளரான டென்னிஸ் மார்கோவ்ஸ்கி என்னும் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கன் ட்ரீம்ஸ் மற்றும் டெட்ராய்ட் அன்லீடட் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், தி பெர்னி மேக் ஷோ மற்றும் சிஎஸ்ஐ: மியாமி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மைக் படாயே நடித்துள்ளார்,
மேலும் எக்ஸ்-மென்: டேஸ் ஆஃப் ஃபியூச்சர் பாஸ்ட் படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
மைக் படாயே கடைசியாக 2018 ஆம் ஆண்டு தொலைக்காட்சி திரைப்படமான பிராங்க் ஆஃப் அமெரிக்காவில் நடித்திருந்தார். ஒரு நகைச்சுவை நடிகராக, படாயே அமெரிக்காவின் மத்திய கிழக்கில் பல நிகழ்ச்சிகளை நடத்தி.யுள்ளார். ஜோர்டான் அரச குடும்பத்தின் அழைப்பின் பேரில் அதன் தலைநகரான அம்மானில் நடைபெற்ற காமெடி ஷோ ஒன்றையும் நடத்தியுள்ளார்.
52 வயதான மைக் படாயே தனது மிச்சிகன் வீட்டில் வசித்து வந்தார். அவர் தூக்கத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மைக்கின் சகோதரிகள் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு ஜூன் 17 அன்று மிச்சிகனில் உள்ள பிளைமவுத்தில் உள்ள ரைசன் கிறிஸ்ட் லூத்தரன் தேவாலயத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக் படேயின் மரணம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காரணம் அவருக்கு இதயநோய் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இதற்கு முன் தென்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். தனது திறமையால் ரசிகர்களிடையே ஒரு காமெடி நடிகராக சிரிப்பை ஏற்படுத்திய மைக் படாயேயின் மரணம் நிச்சயம் பேரிழப்பு என அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.