அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள பிரம்மாஸ்திரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாஸ்திரா என்ற படத்தை தயாரித்துள்ளது. அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்தப்படத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் நாயகன் ரன்பீர் கபூர் சிவனின் அவதாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்படம் இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்தும் வெளியிடப்படுகின்றன.
அண்மையில் கூட தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்க கூடிய சிரஞ்சீவி இந்தப்படத்திற்காக டப்பிங் பேசினார். 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படமும் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.