கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’நாகினி’ எனும் இந்தி டப்பிங் தொடர் மூலம், இந்தி தொலைக்காட்சி ரசிகர்கள் தாண்டி, தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை மௌனி ராய்.


பிரம்மாஸ்திராவில் நாகினி




இவர் தற்போது சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணித்து சினிமாவிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் பாலிவுட்டில் அதிக பொருட் செலவில் ’பான் இந்தியா’ படமாக தயாராகி வரும் ’பிரம்மாஸ்திரா’ படத்தில் ஜூனூன் எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் மௌனி ராய் நடித்துள்ளார்.


பாலிவுட்டில் சமீபத்தில் காதல் திருமணம் செய்த ரன்பீர் கபூர் - அலியா பட் ஜோடியின் நடிப்பில் முதன்முதலாக திரைக்கு வரவிருக்கும் படம் ’பிரம்மாஸ்திரா’. இதனால் இப்படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


எகிறும் எதிர்பார்ப்பு


மேலும், ’ஏ ஜவானி ஹே திவானி’எனும் ரன்பீர் - தீபிகா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இளம் இயக்குநர் அயன் முகர்ஜி, இப்படத்தை இயக்கியுள்ளார். தவிர அமிதாப் பச்சன், நாகார்ஜூனா போன்ற பெரும் நடிகர்களும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இச்சூழலில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இப்படம் வெளியாக உள்ளதால், தென்னிந்தியாவில் ஏற்கெனவே பிரபலமான நடிகையாக விளங்கும் மௌனி ராய் இதில் நடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


புகழ்ந்து தள்ளிய இயக்குநர்


 






இந்நிலையில், பிரம்மாஸ்திராவில் மௌனி ராயின் கதாபாத்திரம் குறித்து படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி இன்ஸ்டாவில் சிலாகித்து பதிவிட்டுள்ளார்.


”படம் பார்த்து விட்டு பலரும் மௌனியின் நடிப்பு பற்றி தான்  பேசப்போகிறார்கள். சிவனிடம் மௌனிக்கு ஆழமாக நம்பிக்கை உள்ளது, தன்னை அவர் சிவனிடம் முழுமையாக ஒப்படைத்துள்ளார். அதனால் பிரம்மாஸ்திராவையும் அவர் இயற்கையாகவே புரிந்துகொண்டார்.


இந்தப் புரிதலோடு அவர் பிரம்மாஸ்திராவில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்” என அயன் முகர்ஜி பாராட்டியுள்ளார்.


சிவன் அவதாரம்!




’பிரம்மாஸ்திரா’  சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை மையப்படுத்திய படம் என்றும், சிவனின் அவதாரமாக ரன்பீர் இப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்ப ரன்பீர் சூலாயுதத்துடன் படத்தின் டீசர், புகைப்படங்களில் காணப்படும் நிலையில், இப்படம் ட்ரையாலஜி எனப்படும் மூன்று பாகங்களாக வெளிவர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ப்ரித்தம் இசை அமைத்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.