பாலிவுட் படமான 'லகான்' 21 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 15, 2001 அன்றுதான் வெளியானது. வெளியான நாளிலிருந்து இன்றுவரை அந்தப் படம் ஏதோ ஒருவகையில் விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்றாவது இந்தியத் திரைப்படம் எனும் பெருமை உள்பட 'லகான்' திரைப்படம் எப்போதும் தலைப்புச் செய்தியாகவே இருந்து வந்துள்ளது.
சுதந்திரத்துக்கு முந்தைய விக்டோரியா மகாராணி காலக்கட்டத்திலும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தியும் வெளியான இப்படம் இந்தியாவின் மிகப்பெரும் வெற்றிப் படங்களுள் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.
தற்போது இந்தப் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் லகான் திரைப்படம் ப்ராட்வே ஷோக்கள் போன்று மேடை நாடக வடிவில் வெளிநாடுகளில் உருவாக இருக்கிறது. இங்கிலாந்தில் இருந்து பல முன்னணி தயாரிப்பாளர்கள் இதற்காக அமீர்கான் புரொடக்ஷன்சிடம் உரிமை கோரியுள்ளனர் என்றும், இதில் குறிப்பாக வெஸ்ட் எண்ட் தியேட்டர் என்னும் நிறுவனமும் உரிமை கோரியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
’தி வெஸ்ட் எண்ட் தியேட்டர்’ நிறுவனம் என்பது அமெரிக்காவின் ’தி பிராட்வே’ ஷோவுக்கு நிகராக லண்டனில் நிகழ்ந்துவரும் மாபெரும் நாடக நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமீர் கான் தற்போது கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் ஆகியோருடன் ’லால் சிங் சத்தா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். டாம் ஹான்க்ஸ் நடிப்பில் ஹாலிவுட்டில் உருவாகி விருதுகளைப் பெற்ற ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் பாலிவுட் தழுவலாக இந்தப் படம் உருவாகி உள்ளது.
இந்தத் திரைப்படத்தையும் அமீர்கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வயகாம் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. அத்வைத் சந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ப்ரீதம் சக்கரவர்த்தி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.