இந்தி ஆண்டில் அதிகம் வசூலித்து பிரம்மாஸ்திரா நம்பர் 1 இந்தி படமாக உருவெடுத்துள்ளதாக அதன் இயக்குநர் அயன் முகர்ஜி பதிவிட்டுள்ளார்.


பாலிவுட் Vs தென்னிந்திய சினிமா


ரன்பீர் கபூர் - அலியா பட் நடிப்பில், பெரும் பொருட் செலவில் தயாராகி பான் இந்தியா படமாக கடந்த செப்.9ஆம் தேதி பாலிவுட் திரைப்படமான பிரம்மாஸ்திரா உலகம் முழுவதும் ரிலீசானது.


பாலிவுட் சினிமாக்களை ஓரம்கட்டி தென்னிந்திய சினிமாக்கள் சமீபகாலமாக பான் இந்தியா ரசிகர்களை மகிழ்வித்து பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில்,  பிரம்மாஸ்திரா மீது பாலிவுட் திரையுலகினர் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.


பெரும் பொருட்செலவில் தயாரான பிரம்மாஸ்திரா




பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமீர் கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் தோல்வியை தழுவிய நிலையில், இந்த ஆண்டு பாலிவுட்டில் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் வெளியான பூல் புலையா 2 படம் மட்டுமே 262 கோடி வசூலித்து வெற்றிப் படமாக வலம் வந்தது.


இச்சூழலில் பெரும் எதிர்பார்ப்புகளிடையே வெளியான பிரம்மாஸ்திரா பாக்ஸ் ஆஃபிஸில் முதல் மூன்று நாள்களிலேயே 225 கோடி வசூலித்து சாதனை புரிந்தது.


கலவையான விமர்சனம்


பாலிவுட்டில் இதற்கு முன் இரண்டு படங்களை மட்டுமே எடுத்துள்ள இளம் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வெளியான பிரம்மாஸ்திரா படத்தில், நடிகர்கள் ஷாருக் கான், அமிதாப் பச்சன், நாகார்ஜூன், மௌனி ராய் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.


ஆனால்,  410 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் அடுத்தடுத்த நாள்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் படமா, தோல்விப் படமா என கணிக்க முடியாத சூழல் நிலவி வந்தது.


இயக்குநர் பதிவு


இச்சூழலில் பிரம்மாஸ்திரா படம் 25 நாள்கள் முடிவில் 425 கோடி ரூபாய் வசூலித்து இந்த ஆண்டு பாலிவுட்டின் மிகப்பெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளதாக அயன் முகர்ஜி முன்னதாக பதிவிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டு மகிழ்ந்துள்ள அயன் முகர்ஜி, தன் ரசிகர்களுக்கு நவமி வாழ்த்துகளையும் நன்றியையும் பகிர்ந்துள்ளார்.


 






பிரம்மாஸ்திரா படம் மொத்தம் மூன்று பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் முன்னதாக வெளியானது. அஸ்திரா வெர்ஸ் எனும் கான்சப்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளியாக உள்ளன.


இப்படத்தில் முதல் பாகத்தை எடுத்து முடிக்க மொத்தம் 10 ஆண்டுகள் அயன் முகர்ஜி எடுத்துக்கொண்ட நிலையில், படத்தின் விஎஃப்எக்ஸ் தான் பெரும் பொருட் செலவுக்கும் இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டதற்கு காரணம் என்றும் முன்னதாக தெரிவித்திருந்தார்.