லால் சிங் சத்தா படம் பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 






இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் ஆமீர்கான். கரீனா கபூர், ஷாரூக்கான், நாக சைதன்யா. மோனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சிங் சத்தா”. இந்த படத்தை ஆமீர்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமம் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படமானது ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியானது. இதே தேதியில்  ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ரக்‌ஷா பந்தன் படமும் வெளியானதால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 


ஆனால் லால் சிங் சத்தா படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை என சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆமீர்கான் கொடுத்த பேட்டி ஒன்றில் ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறி விடலாமா என்று அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டதாகவும் பேசினார்.


அவரது இந்தப்பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை பெற்றது. அந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு முறையும் ஆமீர்கான் படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுவது வழக்கம். அந்த வகையில் லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அண்மையில் ட்விட்டரில் பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.


மேலும் லால் சிங் சத்தா டிரெய்லர் வெளியான போதே இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அதேசமயம் சீக்கியர்களையும் , இந்திய ராணுவத்தையும் இப்படம் கேவலப்படுத்தியதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தான்  பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ட்விட்டரில், இப்போதுதான் லால் சிங் சத்தாவைப் பார்த்தேன். இந்தப் படத்தை கண்டு நான் உருகிவிட்டேன். பிளஸ், மைனஸ் ஒருபுறம் இருக்க, இந்தப் படம் பிரமாதமாக இருப்பதால் இதனை தவறவிடாதீர்கள் நண்பர்களே! இப்போதே சென்று அதைப் பாருங்கள். அழகாக இருக்கிறது என தெரிவித்தார். 






இதனைக் கண்ட இணையவாசிகள் ஹிருத்திக் ரோஷனை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். குறிப்பாக நீங்கள் இந்துக்களை ஆதரியுங்கள். இல்லையென்றால் நாங்கள் உங்களின் விக்ரம் வேதா படத்தை புறக்கணிப்போம் கூறி ட்விட்டரில் #BoycottVikramVedha என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா படத்தின் ரீமேக்கில் தான் ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண