இளசுகளை கவர்கிறோம் என்கிற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களை வைத்து அதை பெருமையாக விளம்பரப்படுத்தும் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரட்டை வசனங்களை பேசுவதையே தயங்கி தயங்கி பேசிக்கொண்டிருந்த காலம் போய், எதை பேசக் கூடாதோ, அதை அழுத்தம் திருத்தமாக பேசிக் கொண்டிருக்கிறது சினிமா. 


முன்பெல்லாம் இரட்டை அர்த்த வசனங்கள் வரும் போது, சென்சாரில் ‛ஃபீப்’ சவுண்ட் வரும். ஆனால் இன்று பல படங்களில் அவ்வாறு செய்ய நினைத்தால் படம் முழுக்க ‛ஃபீப்’ சவுண்ட் தான் போட வேண்டும். அந்த அளவிற்கு காமநெடி கலந்துவிடப்பட்டிருக்கிறது. 






‛ஃபான் இந்தியா’ என்கிற பெயரில், பல மாநிலங்களிலிருந்து அடுத்தடுத்து படங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால், பிற மொழி படங்கள் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டு தான் இருக்கிறது. அப்படி வெளியாகும் படங்களை சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம், அல்லது அதற்கான இசை உரிமம் பெற்ற நிறுவனங்கள் பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்து, மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். அந்த வகையில் பிரபல சோனி நிறுவனம் சமீபத்தில் ஒரு போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 


படத்தின் தலைப்பே படுமோசமாக உள்ளது. Boy Friend For Hire (ஆண் நண்பர் வாடகைக்கு) என்கிற படத்தின் போஸ்டர் தான் தற்போது பிரபலமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கில் அக்டோபர் 14ம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்திற்கான விளம்பரத்தை இப்போதே தொடங்கிவிட்டனர். 


இந்த போஸ்டரில் அப்படி என்ன இருக்கிறது. பெண் ஒருவர், படுக்கையில் இருக்கிறார். அவர் அருகில் ஆடைகள் இல்லாமல் ஆண் ஒருவர் நிற்கிறார். அவர் தனது அந்தரங்கப்பகுதியை க்யூஆர் கோர்ட் போர்டு ஒன்றை வைத்து மறைத்துக்  கொண்டிருக்கிறார். அந்த போர்டு எதற்கு என்றால், அவருக்கான வாடகை பணம் செலுத்துவதற்காகவாம். 






ஆண் விபச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக, பட்டவர்த்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், தற்போது பல இடங்களில் பகிரப்பட்டு வருகிறது. கம்பம்பாடி சந்தோஷ் இயக்கி, விஸ்வந்த் துட்டும்புடி, மாளவிகா சதீஷன் நடித்துள்ள இத்திரைப்படம், ஒரு தெலுங்கு படமாகும்.