கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, 83, ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் மற்றும் புஷ்பா ஆகிய படங்கள் சனிக்கிழமையன்று ரூ.30 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. இப்படத்தின் வசூல் சாதனை கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த அனைவரும் தியேட்டர் பக்கம் கவனம் செலுத்தியிருப்பதை உறுதி படுத்துகிறது. இதற்கு இப்படங்களின் ட்ரெய்லர்களும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 


83 படத்தின் முழுமையான எதிர்பார்த்த வசூல் குறைவாக இருந்தாலும், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் மற்றும் புஷ்பா படங்களின் பங்களிப்பு திரையரங்கினருக்கு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த வரிசையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று 83 திரைப்படம் 16 கோடி வசூலையும் ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படம் 10 கோடி வசூலையும் புஷ்பா திரைப்படம் 4 கோடி வசூலையும் பெற்றுள்ளது. 




பொதுவாக கிறிஸ்மஸ் தினத்தில் திரையரங்குகளில் ஓடும் திரைப்படங்களைப் பொறுத்தவரை ரூ. 40 கோடியைத் தொடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. ஆனால் தற்போதைய காலகட்டம் வெளியான படங்களை மோசமான அளவுக்கு தள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. தற்போது அதிகம் பரவிவரும் ஒமிக்ரான் பரவல் தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்களை இன்னும் குறைக்கவில்லை என்றே தெரிகிறது. 


ஒமிக்ரான் பரவலால் சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு காட்சிகள் சில இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்தி படங்களுக்கு இரவுக் காட்சிகள் ஒருபோதும் பெரிய பங்களிப்பாக இருந்ததில்லை. 


இதுவரை வெளியான ஸ்பைடர் மேன் படங்களில் டிசம்பர் 16 வெளியான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் தனித்துவமானதாக கருதப்படுகிறது. திரைக்கதை, ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள், துல்லியமான வசனங்கள் என பார்வையாளர்களுக்கு முழு விருந்து படைத்துள்ளது இத்திரைப்படம். இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. 




ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த ஊ சொல்றியா மாமா; ஊகும் சொல்றியா மாமா பாடலுக்காகவே பார்வையாளர்கள் தியேட்டரில் குவிந்தனர். 


1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ் தலைமையிலான அணி உலகக்கோப்பையை முதன் முதலில் வென்றது. அந்த வரலாற்றை திரைப்படமாக எடுத்துள்ள படம்தான் 83. இதில் கபில் தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவரது மனைவியாக தீபிகா படுகோனும், ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவாவும் நடித்துள்ளனர்.