போஸ் வெங்கட் 


கடந்த 2020 ஆம் ஆண்டு கன்னிமாடம் படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் போஸ் வெங்கட்.  சாதி வெறியையும் அதன் விளைவாக ஏற்படும் ஆணவக் கொலையையும் மையமாக வைத்து உருவான படம் கன்னிமாடம்.  இந்தப் படம் விமர்சகர்களிடம் பாராட்டுகளை பெற்றதைத் தொடர்ந்து தற்போது போஸ் வெங்கட் இயக்கியுள்ள படம் சார். விமல் நடித்த வாகை சூட வா படத்தைப் போல் இப்படமும் கல்வியை மையப்படுத்திய கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


முதலில் மா.பொ.சி என்று வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் டைட்டில் சார் என்று மாற்றப்பட்டது. விமல் நாயகனாக நடித்துள்ள நிலையில் சாயாதேவி , மகேஷ் தேவி , சரவணன் , நெறியாளர் செந்தில், விஜய் முருகன் இதில் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் சிராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை வெற்றிமாறன் வழங்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு இசையமைத்த சித்துகுமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். சார் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் இந்த டீசரை வெளியிட்டுள்ளார்கள்.


சார் டீசர்


போஸ் வெங்கட் இயக்கிய முதல் படமான கன்னி மாடம் படத்தைப் போலவே சார் படமும் சமூக பிரச்சனையை மையக்கதையாக பேசும் படமாக உருவாகியிருக்கிறது. கடவுள் நம்பிக்கையை அரசியலாக்கும் கும்பல் ஒருபக்கம் இன்னொரு பக்கம் படித்து முன்னேற வேண்டும் என நினைக்கும் மக்கள். இந்த இரு தரப்பினருக்கும் இடையில் நிகழும் கதை சார். ’என்னால் ஒருவருக்கு எல்லாவற்றையும் கற்றுத் தரமுடியாது. என்னால் ஒருவரை சிந்திக்க வைக்க மட்டுமே முடியும் ‘ என சாக்ரெட்டீஸின் வசனத்தில் தொடங்கும் டீசர் 


“ கண்ணுடையர் என்பர் கற்றோர் முகத்திரண்டு 


புண்ணுடையர் கல்லா தவர்’ 


என்கிற திருக்குறளோடு முடிகிறது. சாதி , மதம் என பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் கல்வியே ஒருவரின் சிறந்த செல்வம் என்பதை உணர்த்தும் வகையில் சார் படம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்