போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வலிமை, நேர்கொண்ட பார்வை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள 'துணிவு' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்போடு பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ளது.
ஓடிடி தளங்களால் ரீச் குறைந்தது :
துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். “படங்கள் ரீமேக் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. நல்ல திரைப்படங்கள் சர்வதேச அளவில் நிச்சயமாக வரவேற்க பட வேண்டும். என்னுடைய படங்கள் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படங்கள். குறிப்பாக தமிழில் வெளியான சார்லி சாப்ளின் திரைப்படத்தின் ரீமேக் தான் ரீ என்ட்ரி திரைப்படம். பல நாடுகளில் இருந்து அப்படத்தின் காப்பி ரைட்ஸ் கேட்டு அழைப்பு வந்தது. பல ஹாலிவுட் திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. அதே போல பல நல்ல சைனீஸ், ஸ்பானிஷ் திரைப்படங்களும் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. இன்று மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் கொரியன் படங்கள் கூட பல மொழிகளில் டப்பிங் செய்யப்படுகின்றன. ஆனால் சமீபகாலமாக ரீ மேக் திரைப்படங்களுக்கான வரவேற்பு சற்று குறைந்ததற்கு காரணம் ஓடிடி தளங்கள். ஓடிடி தளங்கள் மூலம் மக்களால் டப்பிங் செய்யப்பட்ட அனைத்து மொழி படங்களையும் பார்க்க முடிகிறது. இதனால் சர்வதேச அளவில் உள்ள மக்கள் அனைத்து விதமான மொழி படங்களையும் பார்த்து ரசிக்க முடிகிறது. எனவே ரீமேக் அல்லது டப்பிங் திரைப்படங்களின் ட்ரெண்ட் என்றுமே தொடரும். இருப்பினும் ரீமேக் திரைப்படங்களின் ரீச் கொஞ்சம் குறைந்தாலும் அது என்றுமே அழியாது.
ஹிந்தியில் டப்பிங் செய்யப்படுமா?
துணிவு திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் குறித்து இதுவரையில் நான் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இருப்பினும் அது ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனல்களுக்காக ஹிந்தியில் டப்பிங் செய்யப்படும். தற்போது துணிவு திரைப்படம் தமிழில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறினார்.
வேறுபாடு பார்த்ததில்லை :
பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே படம் எடுக்க வேண்டும் என நான் நினைத்ததில்லை. பல அறிமுக இயக்குனர்கள், அறிமுக நடிகர்களை வைத்து படம் எடுத்துள்ளேன். பல புது நடிகர்களை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பல தமிழ் மற்றும் தெலுங்கு இயக்குனர்கள் என்னுடைய தயாரிப்பில் ஹிந்தியில் தனது முதல் படங்களை எடுத்துள்ளார்கள். ஜீவா, பிரபுதேவா, வம்ஷி, அகத்தியன், சூர்யா போன்ற பல இயக்குனர்களை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளேன். எனக்கு தேவை நல்ல கதை. அதை யார் எடுத்து வந்தாலும் நான் படம் தயாரிக்க தயங்கியதில்லை.
திரைக்கதை தான் முக்கியம் :
படத்தின் திரைக்கதை தான் மிக மிக முக்கியம். அது சரியாக அமைந்தால் மற்ற அனைத்தும் அதை பின்தொடரும் என்பது எனது கருத்து. என்னதான் மாஸ் நடிகரை வைத்து படம் எடுத்தாலும் திரைக்கதை சரியாக அமைந்தால் மட்டுமே அவர்களாலும் அதை வெற்றிக்கு நகர்த்த முடியும். கதை இல்லாமல் ஹீரோவை மட்டுமே வைத்து படத்தை வெற்றிப்படமாக்க முடியாது” என கூறியிருந்தார் தயாரிப்பாளர் போனி கபூர்