தனது எதிர்காலம் குறித்து மகள் ஜான்வி கபூர் முடிவெடுத்த போது அம்மாவும் மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவி கவலைப்பட்டதாக போனி கபூர் தெரிவித்துள்ளார். 


கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் பல மொழி ரசிகர்களிடம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஜான்வி  நடிப்பில் மிலி படம் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது. சன்னி கௌஷல் மற்றும் மனோஜ் பஹ்வா ஆகியோர் இணைந்துள்ள இப்படத்தை  மாத்துக்குட்டி சேவியர் இயக்கியுள்ளார்.  இது மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் ரீமேக் ஆகும்.


இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியாக கபில்ஷர்மா ஷோவில் தனது தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூருடன் இணைந்து கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பான நிலையில் அதில் தனது குடும்பம் குறித்து பல விஷயங்களை போனி கபூர் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் ஜான்வியைப் பொறுத்தவரை அவர் நடிகையாக விரும்புவதாக எங்களிடம் தெரிவித்த போது  ஸ்ரீதேவி மிகவும் கவலைப்பட்டார். 






நடிப்பு கற்க லாஸ் ஏஞ்சலுக்கு செல்ல முடிவு செய்த போது தனியாக எப்படி இருப்பாள் என்ற கவலை எழுந்தது.  ஒவ்வொரு குழந்தையும் ஒருநாள் சுதந்திரமாக வளர விரும்பும். இது அவளுக்கான நேரம் என என்று நான் ஸ்ரீதேவிக்கு அறிவுறுத்தினேன். மேலும் இந்நிகழ்ச்சியில் ஜான்வி குறித்த தனிப்பட்ட விஷயங்களையும் போனி கபூர் பகிர்ந்து கொண்டார். அதில் ஜான்வியின் அறைக்குள் நான் நுழையும் போது எப்பொழுதும் அவரது ஆடைகள் அங்கும் இங்குமாக கலைந்து கிடக்கும் எனவும், ஜான்வி டூத் பேஸ்ட்டின் மூடியை கூட மூடி வைத்திருக்க மாட்டார். அதை நான் தான் எடுத்து மூடி வைக்க வேண்டும் என்றும் கபில் ஷர்மாவிடம் கூற ஜான்வி எரிச்சலடைந்தார். இப்படி பல சுவாரஸ்யமான நினைவுகளால் கபில் ஷர்மா நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.