பிரபல பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ-யின் உடல்நலன் சீராக உள்ளதாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் இசைக்கச்சேரியில் கலந்து கொள்வதற்காக பாம்பே ஜெயஸ்ரீ பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கு அவருக்கு உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. லண்டன், லிவர் பூலில் ஓட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த பாம்பே ஜெயஸ்ரீ, கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இது தொடர்பாக அவருடைய இன்ஸ்டாகிட்ராம் ஸ்டேடஸில், பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இருப்பினும், சரியான நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டதாகவும், அதற்கு மருத்துவர்களுக்கு நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நலம் சீராக உள்ளதாகவும், இரண்டு நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பே ஜெயஸ்ரீ-க்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான தனிப்பட்ட நேரத்தை வழங்குமாறும் போஸ்டில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.