பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
உடல்நிலை அப்டேட்:
பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர். அதன்படி, ”பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, சரியான நேரத்தில் மருத்துவ உதவிகளை பெற்றார். தற்போது உடல்நிலை சீராக உள்ளதால், அவருக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பம் தனிமை மற்றும் உங்கள் ஆதரவைக் கோருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை பாதிப்பு:
கர்நாடக இசைக்கலைஞரும், பிரபல பாடகியுமான 58 வயதான பாம்பே ஜெயஸ்ரீ, இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த இசைக்கச்சேரியில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு அவருக்கு திடீரென உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. லண்டன், லிவர் பூலில் ஓட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த பாம்பே ஜெயஸ்ரீ, நீண்ட நேரமாக வெளியே வராததால் உடனிருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சுயநினைவின்றி கோமா நிலையில் மயங்கி கிடந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத்தினர் கொடுத்த தகவல்
இதுதொடர்பாக அவரது குடும்பத்தின் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இருப்பினும், சரியான நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி. மேலும், பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நலம் சீராக உள்ளது. இரண்டு நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான தனிப்பட்ட நேரத்தை வழங்குமாறும் பதிவில் கேட்டுக்கொள்ளப்பட்டது. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
திரையுலகி பாம்பே ஜெயஸ்ரீ:
இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக தமிழில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில், ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அதிலும் மின்னலே படத்தில் இடம்பெற்ற 'வசீகரா', காக்க காக்க படத்தில் இடம்பெற்ற 'ஒன்றா ரெண்டா ஆசைகள்', தாம் தூம் படத்தில் இடம்பெற்ற 'யாரோ மனதிலே' உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
மத்திய அரசின் 'பத்மஸ்ரீ', தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ சினிமாவில் பாடுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார்.