Jawaan: ஜவான் நல்லவனா? இல்லை கெட்டவனா? என்பதை தெரிந்து கொள்ள ரெடியா? என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெளியிட்ட லேட்டஸ்ட் போஸ்டர் டிரெண்டாகி வருகிறது. 



ராஜா ராணியில் தன் பயணத்தைத் தொடங்கி, நடிகர் விஜய்யை வைத்து இயக்கி சூப்ப்ர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். பாலிவுட் கிங்  என ரசிகர்கள் கொண்டாடும் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.  தான் மட்டும் பாலிவுட்டிற்கு செல்லாமல் கோலிவுட்டில் இருந்து ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அட்லீ. அந்த வகையில் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நயன்தாரா ஜவானில் ஹீரோயினாகவும், மற்றொரு ஹீரோயினாக தீபிகா படுகோனும் நடித்துள்ளனர்.


மாஸ் வில்லனாகும் விஜய் சேதுபதி


பவுர்ஃபுல் ஹீரோ, ஹீரோயின் வரிசையில் மாஸ் வில்லனை காட்ட, விஜய் சேதுபதியை தேர்வு செய்தார் அட்லீ. ஏற்கெனவே பாலிவுட்டில் சில படங்களிலும், வெப் ரீசிஸ்களிலும் கலக்கி வரும் விஜய் சேதுபதியை ஷாருக்கானிற்கு வில்லனாக நடிக்க வைத்துள்ளார். அட்லீ. இவர்களுடன் பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல கோலிவுட் பிரபலங்களும் இணைந்துள்ளனர். இப்படி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஜவான் படத்திற்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். 


நல்லவனா, கெட்டவனா..?


இந்த நிலையில், ஜவானில் தான் நடித்திருக்கும் போஸ்டரை டிவிட்டரில் பகிர்ந்த ஷாருக்கான், ”நான் நல்லவனா, கெட்டவனா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் 30 நாட்களே உள்ளன. ரெடியா..?” என கேட்டுள்ளார். கையில் ரிவால்வாருடன், கூலிங்கிளாஸ் மற்றும் மொட்டை தலையுடன் மிரட்டும் ஷாருக்கானின் இந்த லேட்டஸ்ட் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஜவான் நல்லவனா, இல்லை கெட்டவனா என்ற விவாதத்தில் இறங்கியுள்ளனர். 






வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஜவான் வெளியாக உள்ள நிலையில், முன்னதாக வெளியான அதன் டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடினர். தொடர்ந்து நயன்தாரா கேரக்டரை ரிவீல் செய்யும் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக வில்லனாக கெத்து காட்டும் விஜய் சேதுபதியின் போஸ்டரையும் படக்குழு பகிர்ந்தது ஜவான் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.