பிரபல பாலிவுட் நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் (Shah Rukh Khan) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதி


ஆன் ஸ்க்ரீன், ஆஃப் ஸ்க்ரீன் என தன் சினிமா தாண்டியும் ரசிகர்களை ஈர்த்து உலகம் முழுவதும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு இந்தியர்களின் முகமாக உலக அரங்கில் கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான். ஷாருக்கானுக்கு தற்போது 58 வயதாகிறது.


நேற்றைய தினம் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் 1 சுற்றில் வெற்றி பெற்று நேரடியாக கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தப் போட்டியை கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான் நேற்று மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளித்து, தன் அணி வீரர்களை உற்சாகப்படுத்தி வெற்றியைக் கொண்டாடினார். இந்நிலையில் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


நீரிழப்பு


வெப்ப அலைகள் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக்கான், தற்போது அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


 






நேற்றைய தினம் ஷாருக்கான் தன் மகள் சுஹானா கான் மற்றும் இளைய மகன் ஆபிராம் உடன் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தை வலம் வந்து இரு அணி போட்டியாளர்கள், ஐபிஎல் ரசிகர்கள் என அனைவரையும் உற்சாகப்படுத்தியது பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் ஷாருக்கான் உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்து ஐபிஎல் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.


ஹாட்ரிக் ஹிட் மற்றும் அடுத்தடுத்த படங்கள்


சென்ற ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் ஆயிரம் கோடிகளைக் கடந்து மாபெரும் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றிப் படமாக அமைந்த நிலையில், சென்ற ஆண்டு இறுதியில் வெளியான டங்கி திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களையும், ரூ. 470 கோடிகளையும் வசூலித்தது.


அடுத்ததாக யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் காப் யுனிவர்ஸின் பாகங்களில் ஒன்றாக உருவாகும் டைகர் Vs பதான் திரைப்படத்தில் சல்மான் கானுடன் இணைந்து ஷாருக்கான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘இன்ஷால்லா’ படத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.