திரையுலகில் கன்னியமான திரைக்கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் பாலிவுட் ஸ்டார் அமீர் கான். தனது நடிப்பாலும் படைப்பாற்றலாலும் இந்தியாவை சர்வதேச அரங்கில் உச்சம் தொட வைத்த பெருமைக்குரிய நடிகர் அமீர் கான் 59வது பிறந்தநாள் இன்று.
புதிய முயற்சிகள் மூலம் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்து வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர் கான் செட் செய்த வைத்துள்ள பெஞ்ச் மார்க் அருகே கூட எந்த ஒரு பாலிவுட் நடிகராலும் நெருங்க முடியாது. தமிழ் சினிமாவுக்கு எப்படி ஒரு உலகநாயகனோ அதே போல பாலிவுட்டில் தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக தன்னை உருக்கி கொண்டு பல தடைக்கற்களை தகர்த்து எறிந்து உச்சம் தொட்டவர்.
1965ம் ஆண்டு மஹாராஷ்டிராவை சேர்ந்த திரையுலக பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். பின்னாளில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக கலைஞனாக திகழ்வதற்கு அவரின் குடும்ப பின்னணி பெரும் உதவியாக இருந்தது. நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தை நாடகங்கள் மூலம் மெருகேற்றி கொண்டார். அங்கே தான் அவரின் நடிப்பு பயணம் துவங்கியது.
மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் என அழைக்கப்படும் அமீர் கான் விதவிதமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து பாலிவுட் நடிகர்களுக்கு எல்லாம் ஒரு டஃப் போட்டியாளராக இருந்து வருகிறார். தமிழ் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை. ஆனால் அது இதுவரையில் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. தமிழகத்திற்கு பேரிடர் வரும் சமயத்தில் எல்லாம் தன்னுடைய உதவி கரத்தை நீட்ட தயங்காதவர். தமிழ் சினிமாவில் வெளியாகும் நல்ல திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்துவிடுவார்.
தன்னுடைய படங்களின் ஸ்க்ரிப்ட்களை மிகவும் நேர்த்தியாக தேர்வு செய்வதில் ஸ்பெஷலிஸ்ட். அந்த கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமானதாக உள்ளதா என ஆராய்ந்த பிறகே அதை தேர்ந்து எடுப்பார். அது மட்டுமின்றி ஒரு சில சமயங்களில் எடிட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் என அனைத்து ஏரியாவிலும் தனது ஒத்துழைப்பை கொடுக்க தயங்காதவர். கடினமான உழைப்பாளியாக அறியப்பட்ட அமீர் கான் ஒரு போது மோசமாக திரைக்கதை கொண்ட படங்களை தேர்வு செய்தது கிடையாது.
அமீர் கான் படங்கள் ஒவ்வொன்றுமே சமூக அக்கறை கொண்ட படமாக இருக்கும். இளைஞர்களை உற்சாகப்படுத்தும் படமாக ரங் தே பசந்தி, குழந்தைகளின் டிஸ்லெக்ஸியா பிரச்சினையை மையமாக வைத்து வெளியான தாரே ஜமீன் பர், மதப் பிரச்சினைகளை பற்றி எடுத்துரைத்த பி.கே இப்படி அமீர் கான் படங்கள் சமூகத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தை கொண்டு வரும் வகையில் தான் அவரின் படங்கள் இருக்கும்.
நடிப்பில் திறமையானவர் என பல இயக்குநர்களாலும் போற்றப்பட்ட அமீர் கான் நடிப்பில் வெளியான 'லகான்' திரைப்படம், இந்தியாவுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. இப்படம் அவரை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. ஆஸ்கர் விருது பட்டியலில் கடைசி சுற்று வரை சென்று பெருமை சேர்த்த படம் 'லகான்'. அவரின் நடிப்பு திறமையை அங்கீகரிக்கும் வகையில் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான அமீர் கான் மேலும் பல வெற்றிகளை கொடுத்து இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வாழ்த்துக்கள்.