பிரபல திரையரங்கு நிறுவனமான பிவிஆர் செப்டம்பர் 30, 2022 அன்று நிறைவடையும் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் 2022 ஆம் ஆண்டில் இதுவரை, பாலிவுட் படங்கள் தொடர்ச்சியாக எதிர்பார்த்த வசூலை விட மிகவும் குறைவாக வசூலித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகிய துறைகளில் திரைத்துறையும் ஒன்று. திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் லாபம் பெரிதாக பாதிக்கப்பட்டிருந்தது. கொரோனாவிற்கு பின்பும் மக்கள் கூட்டம் திரையரங்குகளுக்குள் வர அஞ்சினர். இதையெல்லாம் கடந்து படங்கள் மெதுவாக வெளிவர தொடங்க இயல்பு நிலைக்கு திரும்பியது திரையுலகம். இந்நிலையில் பி.வி.ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் பாலிவுட் படங்களின் தொடர் வீழ்ச்சியால் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாஸ்திரா திரைப்படம் இதிலிருந்து விதிவிலக்கே! ஏனென்றால் பிரம்மாஸ்திரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மெகா ஹிட் ஆனது. மேலும் கொரோனாவிற்கு பிறகு வந்த இந்தி திரைப்படங்களில் அதிக வசூல் படைத்த திரைப்படமாகவும் பிரம்மாஸ்திரம் விளங்கியது. ஆனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்களான 'லால் சிங் சத்தா', 'ரக்ஷாபந்தன்', 'லிகர்' போன்ற திரைப்படங்கள் தோல்வியுற்றன. இந்த திரைப்படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கப்பெறவில்லை.
இதன் ஒரு காரணம் கொரோனா ஊரடங்கின் தாக்கம் என்றால் மற்றொரு காரணம் சமூக வலைதளங்கள் தான். பாலிவுட்டில் குறிப்பிட்ட நடிகர்கள் மற்றும் படங்களுக்கு எதிராக ட்விட்டரில் பாய்காட் ஹாஸ்டேக்கள் டிரெண்டானது. இந்த மூலம் குறிப்பிட்ட படங்களையும் நடிகர்களையும் எதிர்த்து வந்தனர் ரசிகர்கள். இந்த ட்ரெண்ட் பாலிவுட் திரையுலகம் முழுக்க எதிரொலித்தது. குறிப்பாக அமீர் கான் மற்றும் அக்சய் குமார் திரைப்படங்களுக்கு இது நிகழ்ந்தது. பாய்காட் லால் சிங் சத்தா, பாய்காட் ரக்ஷாபந்தன் போன்ற ஹேஷ்டாக்கள் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.