இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர் ராம்கோபால் வர்மா. அமிதாப்பச்சன், அமீர்கான், அஜய் தேவ்கன், விவேக் ஓபராய் என்று இந்தியில் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கில் நாகர்ஜூனா, தமிழில் சூர்யா ஆகிய நடிகர்களும் இவரது இயக்கத்தில் நடித்துள்ளனர். ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் அடிக்கடி கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம்.
இந்த நிலையில், ராம்கோபால் வர்மா நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணின் பிறந்த நாள் விழாவில், ராம்கோபால் வர்மா அந்த பெண்ணுடன் இணைந்து நடனமாடுவது போல் உள்ளது. ஆனால், அந்த பெண்ணின் தோள்களில் கைகளை போட்டு அவர் கேக்கை வெட்டுவதும், ஆடும்போது அந்த பெண்ணிடம் மிகவும் நெருக்கமாக நின்று ஆடுவதும், ஆடிக்கொண்டிருக்கும்போதே அந்த பெண்ணின் காலில் விழுவதும் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.
வீடியோவில் காணப்படும் அந்த பெண் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போதுதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப்பெண்ணும், ராம்கோபால் வர்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பலரும் இந்த வீடியோவிற்கு விமர்சனங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். சிலர் ராம்கோபால் வர்மா சார் தங்களுக்குள் இப்படியொரு திறமை இருந்தது ஒருபோதும் தெரியாது என்றும், சிலர் அருமையான நடனம் என்றும், இன்னும் சிலர் சூப்பர் சார், நீங்கள் உங்களால் இப்படி நன்றாக நடனம் ஆட முடியும் என்பதை நம்ப முடியவில்லை என்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலரோ, ராம்கோபால் வர்மாவின் இந்த செயலுக்கு மிக கடுமையாக தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து. இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ராம்கோபால் வர்மா, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் என்னைச் சுற்றி வலம் வருகிறது. கணபதி, பாலாஜி, இயேசு மீது சத்தியம் செய்கிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
மீண்டும் அந்த வீடியோவை டேக் செய்து ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், நான் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறேன் இந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. அந்த சிவப்பு நிற ஆடையில் உள்ள பெண் இனையா சுல்தானாவும் அல்ல. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது சத்தியம் செய்கிறேன். அந்த வீடியோவில் இருப்பது நானல்ல என்று பதிவிட்டுள்ளார். ஆனாலும், நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைத்து ராம்கோபால் வர்மாவை கடுமையாக விமர்சித்தும், மீம் போட்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.