கர்நாடக இசை உலகில் அனைவரும் அறிந்த பிரபலமான குரல் ஜோடி ரஞ்சனி மற்றும் காயத்ரி சந்தோஷ் நாராயணன் இசையில் சர்வர் சுந்தரம் என்னும் சந்தானத்தின் பல வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படத்தின் உணவே மருந்து என்னும் பாடல் மூலம் முதன்முதலில் திரையிசையில் குரல் பதித்தார்கள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தற்போது இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பக்தி பாடலை பாடியுள்ளனர்.


சிபிராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் 'மாயோன்'. என். கிஷோர் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தை 'டபுள் மீனிங் ப்ரொடக்சன்ஸ்' தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். அந்த படத்திற்காக ஒரு பக்தி பாடலை கர்நாடக சங்கீதத்தின் பிரபல ஜோடி ரஞ்சனி மற்றும் காயத்ரி பாடி பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் வேலை செய்த அனுபவத்தை பகிரும் ரஞ்சனி மற்றும் காயத்ரி.



"எல்லாமே திடீரென்று நடந்து முடிந்தது, ராஜா சார் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது, அதில் திரை பாடல்கள் பாடுவதற்கு தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டார்கள், அதோடு அது ஒரு பக்தி பாடல், பஜனை போன்ற ஒரு பாடலை இளையராஜா அவர்கள் கம்போஸ் செய்திருக்கிறார் என்று கூறினார்கள், நான் யோசிக்காமல், இளையராஜாவுடன் வேலை செய்வதில் எங்களுக்குதான் பெருமை என்று ஒப்புக்கொண்டோம்" என்று ரஞ்சனி கூறினார்.


மேலும் பாடல் பதிவின்போது அவருடனான அனுபவத்தை கூறும்போது, "அவருக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார், அதை உங்களிடமும் தெளிவாக எடுத்துரைத்தபின்புதான் பாடல் பதிவுக்கு சென்றோம், அவரோடு இருந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், நிறைய கற்றுக்கொள்ளும்படியாகவும் இருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து பாடலை பாடினோம், சில இடங்களில் தனி தனியாகவும் பாட சொல்லி கேட்டார், "இங்க வேணும்னா சங்கதி போட்டுக்கோங்க" என்று எங்களை எங்களது விருப்பத்திற்கு பாட சொல்லி சொன்னார்" என்று கூறினார் ரஞ்சனி.


இதுதான் இளையராஜாவுடனான அவர்களது முதல் சந்திப்பு என்று கூறியவர், "நாங்கள் தியாகராஜா மற்றும் வேறு சில சிறந்த இசையமைப்பாளர்களின் இசையை பாடி, கர்நாடக இசையின் கோட்பாடுகள் மற்றும் மதிப்புகளை அவர்களின் படைப்புகள் மூலம் புரிந்துகொண்டிருக்கிறோம். ராஜா சார் கூட கிளாசிக்கல் இசைக்கலைஞர்கள் உத்வேகம் பெறக்கூடிய பெரிய பெரிய படைப்புகளை உருவாக்கியுள்ளார். நாங்கள் கூட 'வா வெண்ணிலவே' பாடலின் ராகம் ,தாளம், பல்லவியை 'ஹே ராம்' திரைப்படத்தின் 'இசையில் தொடங்குதம்மா' பாடலில் இருந்து உத்வேகம் பெற்று பாடியுள்ளோம்.



ராஜா சார் பெரிதாக தொலைக்காட்சி, யூட்யூப்கள் காண்பவரில்லை என்று கூறினார், ஆனாலும் அவர் எங்களது கச்சேரிகளை கண்டுள்ளதாகவும், யூட்யூபில் எங்களது 'ராக கேண்டிட்' என்னும் இசை குறித்த உரையாடல் நிகழ்ச்சியையும் கண்டிருக்கிறார். அதில் எங்கள் இளம் தலைமுறையினரை கர்நாடக இசையில் தாக்கத்தை உணரவைக்கும் முயற்சியை குறித்தும் பேசினார். ராஜா சார் போன்றவர்கள் எங்கள் இசையை மட்டுமின்றி உரையாடல்களையும் கவனிக்கிறார்கள் என்பது பெருமையாக இருக்கிறது". என்கிறார்


இந்த பாடலுக்கு ஏன் குறிப்பாக உங்களை தேர்ந்தெடுத்தார் என்ற கேள்விக்கு, "நிறைய பாடகர்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் நான் உங்களை கவனித்தேன், அதில் ஒரு மேஜிக் இருக்கிறது என்று இளையராஜா கூறினார். அவரோடு பாடல் பதிவில் இருந்தது எப்போதும் மறக்கமுடியாத ஒரு கனவு போன்ற அனுபவம்" என்று கூறி முடித்தார்.