தன்னை அடிக்கடி ஆபாசப் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதாக இயக்குநர் அனுராக் கஷ்யப் கூறியுள்ளது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அனுராக் கஷ்யப்


உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுராக் காஷ்யப், சினிமா ஆசையில் 1993 ஆம் ஆண்டு மும்பைக்கு வந்தார். அங்குள்ள தியேட்டர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதி வந்தார். தொடர்ந்து ராம் கோபால் வர்மாவின் படங்களுக்கு வசனம் எழுதிய அவர் பாஞ்ச் என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.


ஆனால் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அப்படம் ரிலீசாகவில்லை.தொடர்ந்து Black Friday, No Smoking, Return of Hanuman, Dev.D, Gangs of Wasseypur, Bombay Velvet உள்ளிட்ட பல படங்களை இயக்கி பாலிவுட்டில் முக்கிய இயக்குநராக வலம் வருகிறார். நடிகராகவும் தன் திறமையை காட்டிய அனுராக் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.


தொடர் சர்ச்சைகள்


அனுராக் காஷ்யபின் படங்கள் தொடர் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இந்தப் படங்கள் அரசை விமர்சிக்கும் வகையில் அல்லது பழமைவாத கருத்துக்களுக்கு எதிரானதாக இருப்பதே இந்தப் படங்கள் மீதான எதிர்ப்புகளுக்கு முக்கிய காரணம். இவர் இயக்கிய முதல் படமே தடை செய்யப்பட்டது.


ஆபாச படங்கள்:


சமீபத்தில் தனது படங்கள் குறித்து பேசிய அனுராக் கஷ்யப் “ என்னுடையப் படங்கள் பெரும்பாலும் திரையரங்குகளில் வெளியாவதை விட பைரஸி தளத்தில் வெளியானதே அதிகம். மக்கள் என்னுடையப் படங்களை திருட்டுத்தனமாக பார்த்துவிட்டு நான் எந்த மாதிரியான ஒரு மனிதன் என்று என்னுடைய ஒழுக்கத்தை  விமர்சிக்கவும் செய்வார்கள்.


என்னுடையப் படங்களின் மூலமாக நான் 8 இல் ஒரு பங்கு தான் சம்பாதித்திருக்கிறேன். படங்களை வெளியிடுவதற்கு திரையரங்குகள் கிடைக்காததே இதற்கு காரணம். என்னுடையப் படங்களை திருட்டுத் தனமாக பார்த்துவிட்டு என்னிடம் பேசும் ரசிகர்களைப் பார்த்தால் நான் என்னை ஒரு ஆபாசப் படத்துடன் ஒப்பிட்டுக் கொள்வேன். ஏனென்றால் என் படங்களுக்கும் அந்த நிலைமைதான்.” என்று அவர் கூறினார்.


எனக்கு அரசை எதிர்க்கத் தெரியும்


 எத்தனையோ நல்லப் படங்களை இயக்கி இருந்தாலும் தன்னுடையப் படங்களுக்கு ஒரு தேசிய விருதும் கிடைக்காதது ஏன் என்கிற கேள்விக்கு பதில் அளித்து அனுராக் ” என்னுடையப் படங்களுக்கு எந்த சூழலிலும் தேசிய விருது கிடைக்கப் போவதில்லை என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் அத்தனை அரசுகளுடன் சண்டையிட்டிருக்கிறேன்.


அதே நேரத்தில் எந்த சூழலிலும் நான் சண்டைபோடுவதை நிறுத்தப் போவதில்லை. இத்தனை ஆண்டுகளில் உங்களுடையப் படங்களுக்காக எப்படி சண்டையிட வேண்டும் என்பது எனக்கு தெரிந்திருக்கிறது. சென்சார் வாரியத்திற்கு எந்த காரணத்திற்காகவும் உங்களுடையப் படங்களின் காட்சிகளை  நீக்கும் உரிமை கிடையாது என்பது எனக்கு தெரிந்திருக்கிறது.” என்று அவர் கூறினார்.


ஹட்டி


அனுராக் காஷ்யப் முக்கிய வில்லனாக நடித்துள்ள  படம் ஹட்டி (எலும்பு) . இந்தப் படத்தில்  நவாசுதீன் சித்திக் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் பாலிவுட் இயக்குநர் அக்‌ஷத் அஜய் ஷர்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஜீ ஃபைவ் ஒடிடி தளம் தயாரித்துள்ளது. இந்த படம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது.