பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்திற்கு தடைவிதித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். இந்த திரைப்படம் கடந்த மார்ச் 11ம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படமானது காஷ்மீரில் 1990களில் பண்டிட்டுகளுக்கு நடந்த கொடுமைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதனால்,இத்திரைப்படம் பாலிவுட்டில் அதிக வசூலை அள்ளியது. குறிப்பாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இத்திரைப்படத்தை பாராட்டியிருந்தனர். சில மாநில அரசுகள் தங்கள் பணியாளர்களுக்கு இத்திரைப்படத்தைப் பார்ப்பதற்கு சம்பளத்துடன் கூடிய அரைநாள் விடுப்பு வழங்கியது. சில மாநிலங்கள் இத்திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்தன.
இந்தநிலையில், இத்திரைப்படத்திற்கு தடைவிதித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த திரைப்படம் எரிச்சலூட்டும் விதமாகவும், இஸ்லாமியர்கள் குறித்து ஒரு சார்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற சித்தரிப்புகள் இரண்டு பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் திறன் கொண்டவை. இது, சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்கும், எங்கள் பல இன மற்றும் பல மத சமூகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் திறன் கொண்டவை என்று கூறியுள்ளது. இன மற்றும் மதத்தை இழிவுபடுத்தும் எதுவும் சிங்கப்பூரில் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இத்திரைப்படமானது, சிங்கப்பூரின் திரைப்பட தரவரிசைப்படி ‘அப்பாற்பட்டது’ என்ற வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவையும், கிறிஸ்தவ பாதிரியார்களையும் இழிவு படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறி கடந்த ஆண்டு ‘Benedetta'என்ற திரைப்படத்தைத் தடை செய்திருந்தது சிங்கப்பூர் அரசு. சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் தி காஸ்மிரி ஃபைல்ஸ் திரைப்படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை விமர்சித்திருந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், இந்திய ஆளும் அரசால், பிரபலப்படுத்தப்பட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்த இத்திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, உலகிலேயே திரைப்படங்களை மிக கடுமையான தணிக்கை செய்யும் நாடு சிங்கப்பூர் தான். இது இயேசுவின் கடைசி நேர சோதனைகள் குறித்த படத்தையே தடைசெய்துள்ளது. அதோடு, ரொமாண்டிக் திரைப்படமான தி லீலா ஹோட்டல் ஃபைல்ஸ் படத்தையும் தடைசெய்யும். காஷ்மீர் இந்துக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் மீது கிண்டலடிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.