பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்து கொள்ளாததற்குத் தனது இரு மகள்கள் ரெனீ சென், அலிசா ஆகியோர் காரணம் இல்லை எனக் கூறியுள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு, `மிஸ் யுனிவெர்ஸ்’ பட்டம் பெற்றதன் மூலமாக புகழ்பெற்ற சுஷ்மிதா சென் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து மகள்களாக வளர்த்து வருகிறார். மேலும், சமீபத்தில் `ஆர்யா’ வெப் சீரிஸ் மூலமாக மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள சுஷ்மிதா சென், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் மூன்று முறை திருமணத்திற்கு மிக அருகில் சென்றதாகவும், மூன்று முறையும் கடவுள் தன்னைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தன்னுடைய காதலர் ரோமான் ஷாலுடன் பிரேக் அப் செய்த சுஷ்மிதா சென் அவருடன் இன்றும் நல்ல நட்பில் இருக்கிறார். இருவரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி ரியாக்ட் செய்வதோடு, `மிஸ் யுனிவெர்ஸ்’ வென்று 28 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடிய நிகழ்ச்சியிலும் அவரோடு கலந்து கொண்டார் ரோமான் ஷால்.
தன் முதல் குழந்தை ரெனீயைத் தத்தெடுத்த பிறகு, தனது காதல் உறவுகளின் முதன்மை விதியை உருவாக்கியதாகக் கூறியுள்ள நடிகை சுஷ்மிதா சென், `நான் யாரையும் என்னிடம் வந்து என் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள கூறவில்லை. அதே போல என் பொறுப்புகளில் இருந்து என்னை விலக யாரும் சொல்லவோ, சொல்ல முயற்சிக்கவோ கூடாது’ எனக் கூறியுள்ளார்.
தனது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை சுஷ்மிதா சென், `அதிர்ஷ்டவசமாக என் வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான ஆண்களைச் சந்தித்திருக்கிறேன்.. ஆனால் நான் திருமணம் செய்யாததற்குக் காரணம், அனைவரும் என்னுடம் பொருந்தவில்லை. இதற்கும் என் குழந்தைகளுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்களால் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. அவர்களால் என் வாழ்க்கை அழகாக மாறியிருக்கிறது. என் வாழ்க்கையில் வந்த நபர்களை என் குழந்தைகள் இருவரும் இரு கரம் கூப்பி வரவேற்றிருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரே விதமான அன்பையும், மரியாதையும் அளித்திருக்கிறார்கள். காண்பதற்கு மிக அழகான காட்சி அது’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், `நான் மூன்று முறை திருமணம் வரை சென்றிருக்கிறேன்.. மூன்று முறையும் கடவுள் என்னைக் காப்பாற்றிவிட்டார். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் என்ன சிக்கல் ஏற்பட்டது என்பதை என்னால் சொல்ல முடியாது.. ஆனால் கடவுள் என்னைக் காப்பாற்றியதோடு, என் குழந்தைகளையும் காப்பாற்றியுள்ளார்.. மோசமான உறவுக்குள் செல்ல கடவுள் என்னை அனுமதிக்கவில்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 1994ஆம் ஆண்டு `மிஸ் யுனிவெர்ஸ்’ பட்டம் வென்ற சுஷ்மிதா சென் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு மகேஷ் பட் இயக்கிய `தஸ்தக்’ திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த சுஷ்மிதா சென், தமிழில் `ரட்சகன்’ படத்தில் கதாநாயகியாகவும், `முதல்வன்’ படத்தில் `ஷக்கலக்க பேபி’ பாடலில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.