பாலிவுட் நடிகை ஆலியா பட் சமீபத்தில் தன்னுடைய `ரகசிய’ காதல் குறித்தும், தன்னுடைய காதலரும், நடிகருமான ரன்பிர் கபூர் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஆலியா பட் தான் ரன்பீர் மீது ஆழமான காதலைக் கொண்டிருப்பதாகவும், அதில் மறைக்க எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் ரன்பீருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 


பாலிவுட் நடிகர்களான ஆலியா பட், ரன்பிர் கபூர் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு, நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்த ரன்பிர் கபூர், `கொரோனா பெருந்தொற்று ஏற்படாமல் இருந்திருந்தால் இருவரும் திருமணம் செய்திருப்போம்’ எனக் கூறியிருந்தார். 



சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஆலியா பட், தன் காதல் குறித்தும், தன் காதலர் ரன்பிர் கபூர் குறித்தும் மனம் திறந்துள்ளார். அதில் அவர், `இதில் மறைக்க எதுவும் இல்லை. நம் வாழ்க்கையில் சில நாள்கள் நமக்கு நேரும் உணர்வுகளைப் பற்றி நாம் பேசாமல் இருப்போம்.. ஏனெனில் அதன் மீது அதீதமான பாதுகாப்பு உணர்வு இருக்கும்.. இல்லையேல் அதுகுறித்து உறுதியாக நமக்கே தெரியாது.. அல்லது அது மிகவும் பெர்சனலாக இருப்பதால் பிறருடன் பகிர முடியாததாக இருக்கும். என் காதலைப் பற்றி ஊர் முழுவதும் இருக்கும் சுவர்களில் ஒட்டுவதைப் போல இல்லை இது.. அதே போல இதில் வெளியில் சொல்லாமல் மறைப்பதற்கும் எதுவும் இல்லை. நான் காதலில் இல்லை எனப் பொய்யாகக் கூறப்போவதில்லை. என் வயதை மனதில் கொண்டு பார்த்தாலும், அதனை மறைக்கக் கூடிய காலகட்டத்தை நான் கடந்துவிட்டேன்’ எனக் கூறியுள்ளார். 


தொடர்ந்து பேசிய ஆலியா பட், `நான் ரன்பிருடன் ஆழமான காதலைக் கொண்டிருக்கிறேன். நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதோடு, இந்த உறவு மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன். இந்தத் தருணத்தில் நான் மிகவும் மனம் திறந்த நபராக இருக்கிறேன். காதலில் இருந்தால் எந்த பயமும் தோன்றாது. ரன்பிருடன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் பல ஆண்டுகளாக காதலில் இருப்பதால், அதனைக் குறித்து பேசுவதில் எனக்கு அதிகம் தயக்கம் இருக்கிறது’ எனக் கூறியுள்ளார். 



நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பிர் கபூர் ஆகிய இருவரும் முதல் முறையாக `பிரம்மாஸ்திரா’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தை அயான் முகர்ஜி இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா அக்கினேனி முதலானோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். 


இந்தியப் புராணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் 9 அன்று வெளியிடப்படுவதாகவும், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.