ஷாருக் கான்
ஃபெளஜி என்கிற தொலைக்காட்சித் தொடரில் தொடங்கியது ஷாருக் கானின் பயணம். ராணுவர் வீரராக இந்த தொடரில் நடித்த ஷாருக்கானுக்கு அடுத்தடுத்த சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இதனைத் தொடர்ந்து தனது முதல் படமான தீவானா படத்தில் துணைக்கதாபாத்திரத்தில் நடித்தார் ஷாருக் கான் (Shah Rukh Khan).
காற்றில் அலையும் மென்மையான தலைமுடி. உற்சாகமான உடல்மொழி, கொஞ்சம் நேரம் அதிகம் பார்த்துவிட்டால் வசியப்படுத்திவிடும் கண்கள், இயல்பான புன்னகை என எல்லாம் சேர்ந்து பாலிவுட் சினிமாவின் புது நம்பிக்கையாக ஷாருக் உருவாகத் தொடங்கினார்.
தொடர்ந்து பாஜிகர் படத்தில் கஜோலுடன் இவர் நடித்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற கரண் ஜோகர் இயக்கிய குச் குச் ஹோத்தா ஹெய் படம் பெண்களை அதிகம் கவர்ந்த நடிகராக்கியது. பெண்கள் மட்டுமில்லை ஆண்களாலும் ரசிக்கும் இயல்புடைய நடிகராக இருந்ததே ஷாருக் கானின் மிகப்பெரிய பலம்.
வெற்றிப்படங்கள்
அவர் நடித்த Dilwaale Dulhaniya Le Jaayenge திரைப்படம் இந்திய சினிமாவில் திரையரங்குகளில் அதிகம் ஓடிய திரைப்படமாக இருக்கிறது. இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் இளைஞர்கள் இந்தப் படத்திற்காக கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் எடுத்துவந்த கதைகளும் இருக்கின்றன.
ரொமாண்டிக் நடிகராக மட்டும் இல்லாமல் தன்னுடைய கரியரில் பல்வேறு புதிய முயற்சிகளையும் எடுத்திருக்கிறார் ஷாருக்கான். தங்களுடைய படங்களில் தாங்கள் சொல்வது போல மட்டுமே நடிக்க வேண்டும் என்று பாலிவுட் தாதாக்களால் கொலை மிரட்டல்கள் ஷாருக்கானுக்கு வந்திருக்கின்றன. தன்னுடைய வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பல நாட்கள் மனச்சோர்வோடு இருந்துள்ளதாக ஷாருக்கான் தனது நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பணியாமல் அதை தைரியமாக எதிர்கொண்டு தன்னுடைய பயணத்தில் வெற்றிப் பெற்றிருப்பதால் தான் இன்று அவரை நாம் கிங் கான் என்று அழைக்கிறோம்.
ஹே ராம்
கமல்ஹாசன் இயக்கிய ஹே ராம் படத்தில் அம்ஜத் கான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷாருக் கான். பாலிவுட்டில் தனது நடிப்பு வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தார் ஷாருக்கான். ஹே ராம் படத்தில் நடிக்க சம்மதித்ததுடன் அந்த படத்தில் நடித்ததற்கு ஒரு ரூபாய் கூட அவர் சம்பளமாக வாங்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார் கமல்ஹாசன்.
”ஷாருக் கானை அனைவரும் ஒரு வணிக நோக்கம் கொண்டவராகவே பார்க்கிறார்கள். இந்தத் தகவலை நான் சொன்னால் பெரும்பாலானவர்கள் நம்பாமல் இருக்கு கூட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் ஹே ராம் படத்தின் கதையை நான் அவரிடம் சொன்னபோது அவர் உடனே இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தது மட்டுமில்லாமல் சம்பளம் வாங்கவும் மறுத்துவிட்டார். ஏதாவது ஒரு வகையில் இந்தக் கதையில் தான் இருக்க வேண்டும் என்று விரும்பினார்“ என்று கமல் தெரிவித்தார்.
ஷாருக் நடித்து புகழ்பெற்ற படங்கள்
பாஜிகர் , குச் குச் ஹோத்தா ஹே, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, வீர் ஜாரா, கல் ஹோ நா ஹோ, சக்குதே இந்தியா, கரண் அர்ஜுன், மொஹப்பதேன், தில் தோ பாகல் ஹே, கபி குஷி கபி கம், ஓம் ஷாந்தி ஓன், டான், ரப் நே பனாதி ஜோடி, தேவ்தாஸ், மே ஹூன் நா, என ஷாருக் கான் நடித்தப் படங்களின் பட்டியலை நினைவில் இருந்தபடியே அடுக்கிக்கொண்டு போகலாம்.