தன்னை சித்தரித்து போலி வீடியோவை உருவாக்கியவர்களுக்கு எதிராக தற்போது ரன்வீர் சிங் வழக்குப்பதிவு செய்துள்ளார்


ஏ. ஐ (Artificial Intelligence)


ஏ.ஐ (AI - Artificial Intelligence) என்று சொல்லப்படக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் வருகை பல்வேறு புதிய விதமான பிரச்சனைகளுக்கு வழி வகுத்துள்ளது. ஏ.ஐ யின் வருகை தொழில் நுட்பத்துறை மற்றும் பிறத் துறைகளை மிக உதவிகரமானதாக பயன்பட்டு வந்தாலும் ஒரு சில நிகழ்வுகள் தவறான நபர்களால் பயன்படுத்தப்படும்போது ஏற்படக் கூடிய ஆபத்தான விளைவுகளையும் நமக்கு காட்டுகின்றன.


சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலியான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இந்த வீடியோவை உருவாக்கியவரை காவல் துறையினர் கைது செய்தனர். 


ரன்வீர் சிங் (Ranveer Singh)


ராஷ்மிகா மந்தனாவைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஆமீர் கான் அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. ஆமீர் கானை தொடர்ந்து தற்போது நடிகர் ரன்வீர் சிங் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான வீடியோ சமீபத்தில்  சமூக வலைதளத்தில் வைரலானது. புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான மனீஷ் மல்ஹோத்ராவின் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் வாரணாசியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரன்வீட் சிங் மற்றும் க்ரிதி சனோன் ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள்.


அப்போது ரன்வீர் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வாரணாசி போன்ற தொன்மையான இடத்தில் பெருமையைப் பற்றி ரன்வீர் சிங் பேசியிருந்தார் . இந்த வீடியோவில் அவர் பேசியதை நீக்கிவிட்டு இந்தியாவின் முதன்மையான அரசியல் கட்சிக்கும் அவர் ஆதரவு அளிக்கும் வகையில் அவரது குரல் ஏ.ஐ மூலம் போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் காட்டுத்தீப்போல் வைரலானது. இதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங் தன் சார்பில் விளக்கமளித்தார்.  ஆனாலும் அதற்குள்ளாக இந்த வீடியோ வாட்ஸ் அப் மூலம் கோடிக்கணக்கான மக்களை எட்டிவிட்டுள்ளது.






இப்படியான நிலையில் ரன்வீர் சிங் இந்த வீடியோவை வெளியிட்ட நபர்களுக்கு எதிராக வழக்கு பதிந்துள்ளதாக ரன்வீர் சிங்கின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 


ரன்வீட் சிங் தொடர்ந்து புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூனின் பழைய வீடியோ ஒன்றும், தற்போதைய தேர்தல் சூழலுக்கு ஏற்ப அரசியல் கட்சிக்கு அவர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஷேர் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.