ஆர்.ஆர். ஆர், புஷ்பா மாதிரியான படங்களை தான ஒருபோதும் திரையரங்கத்தில் பார்க்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் நடிகர் நசீருதீன் ஷா.


நசீருதீன் ஷா


Masoom, Wednesday, The Dirty Picture மேலும் பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் நசீருதீன் ஷா. ஃபிட்டான உடல், ஆண்மை பொங்கும் தோற்றம் என பிற பாலிவுட் நடிகர்கள் ஓடிக்கொண்டிருக்க, ஆண்கள் தொடர்பாக சினிமாவில் கட்டமைக்கப்படும் பொது பிம்பங்களை உடைக்கும் வகையிலான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.


இவர் நடித்த ‘வெட்னஸ்டே’ என்கிற படம் தமிழில் உன்னைப் போல் ஒருவன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தில் நடித்திருந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் நசீருதின் ஷா சமகாலப் படங்கள் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசினார் அப்போது பிரபல தென் இந்தியப் படங்கள் தொடர்பாக தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசினார்.


ஆண்கள் அதிக தாழ்வுணர்ச்சி கொண்டிருக்கிறார்கள்


“ஒரு கமர்ஷியல் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒருவரை நாம் ஏன் ஹீரோ என்று அழைக்கிறோம்?” என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த நசீருதீன் ஷா “ முன்பை விட இப்போதெல்லாம் படங்களில் அதீதமான ஆணாதிக்க பிம்பங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன.


ஆண்கள் முன்பைவிட அதிக தாழ்வுணர்ச்சி கொண்டவர்களாக இருப்பதே இதற்கு காரணம். தங்களைப் பற்றிய தாழ்வான எண்ணம் கொண்ட ஆண்கள் தங்களது ஆசைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக அதீதமான கதநாயக பிம்பத்தை உருவாக்குகிறார்கள். என்னால் ஆர்.ஆர். ஆர் படத்தைப் பார்க்க முடியவில்லை, என்னால் புஷ்பா படத்தைப் பார்க்க முடியவில்லை.


மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வம் படத்தை நான் பார்த்தேன். ஆனால் புஷ்பா ,அர் ,ஆர். ஆர் மாதிரியான படங்கள் பார்வையாளர்கள் மனதில் ஒரு சில நாட்களுக்கு ஒரு விதமான கிளர்ச்சியை மட்டுமே ஏற்படுத்துகின்றன. அதைக் கடந்து இந்தப் படங்களின் பயன் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இந்த மாதிரியானப் படங்களை நான் நிச்சயம் திரையரங்கத்தில் பார்க்கமாட்டேன்.


பெண்களுக்கு ஆர்.ஆர் ஆர் பிடித்ததா ?


மேலும் ஒரு படம் பெண்களுக்கு பிடிக்கிறது என்றால் அந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று  நான் சொல்வேன். பெண்கள் ஒரு படத்துடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றக் கூடியவர்கள். அவர்களுக்கு ஒரு படம் பிடித்தால் நிச்சயம் அது மக்களிடம் போய் சேரும். ஆர்,ஆர்.ஆர் படம் எத்தனைப் பெண்களுக்கு பிடித்தது என்று நீங்கள் ஒரு கணக்கெடுத்தால் அதற்கு ஒரு சுவாரஸ்யான பதில் கிடைக்கலாம்“ என்று அவர் கூறினார்.


மேலும் இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்கள் குறித்து பேசியபோது “எனக்கு இன்றைய தலைமுறை இயக்குநர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. முந்தைய தலைமுறை இயக்குநர்களைக் காட்டிலும் அவர்கள் அதிக அறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் சின்ன பட்ஜட் படங்கள் நிச்சயம் தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறும் என்று நான் நம்புகிறேன்” என்று நசீருதின் ஷா பேசியுள்ளார்.