அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய், சிறப்பு தோற்றத்தில் ஷாரூக்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “பிரம்மாஸ்திரா”. 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. அப்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடைசியாக வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்நிலையில் பிரம்மாஸ்திரா திரைப்படம் குறித்து பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது எனக்குள் இருக்கும் திரைப்பட மாணவன் இந்த படத்தை திரும்பவும் பார்க்க வேண்டும். சண்டைக்காட்சி, க்ரேடிங், பின்னணி இசை,வி.எப்.எக்ஸ் சவுண்ட் டிசைன் என அனைத்தும் பிரமாதமாக உள்ளது. நம்பமுடியாத அளவு வேலைப்பாடுகள்! படம் மிகவும் நன்றாக உள்ளது. இந்த திரைப்படத்தை நான் முழுவதுமாக ரசித்தேன். பட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தை இந்தி தவிர்த்து பிற நான்கு மொழிகளிலும் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பாலிவுட் படங்கள் புறக்கணிப்பு கலாச்சாரம் ஒருபுறமிருக்க, மறுபுறம் பெரிய ஹீரோக்களின் படங்களின் தோல்வி பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 410 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இந்தி சினிமாவின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக அமைந்தது. இதனால் பிரம்மாஸ்திரா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் பிரம்மாஸ்திரா திரைப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் ரூ. 36 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மிகப்பெரிய விடுமுறை இல்லாத ஓப்பனிங் கலெக்ஷன் என சிறப்பை பெற்றுள்ளது. முதல் நாளில் இந்தியா முழுவதும் 13 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் ஆன்லைன் ஷோக்களின் அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டும் ரூ.19.66 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பிரம்மாஸ்திரா படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.