மும்பையின் பருவமழை ஒருபக்கம் தொடங்கியிருக்க, பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சமீபத்தில் ரொமான்ஸ் மெலடி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘Phir Na Aisi Raat Ayegi’  என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலை நடிகர் ஆமிர் கான் தனது சமூக வலைத்தளங்களின் லைவ் பகுதி மூலமாக வெளியிட்டார். திரைப்படங்களில் காதல் வயப்பட்ட ஆமிர் கானைக் கொண்டாடிய ரசிகர்களுக்கு இந்தப் பாடல் வெளியீட்டின் போது அதிர்ச்சி தரும் விதமாக தனது முதல் காதல் குறித்தும், முதல் காதல் முறிவு குறித்தும் பேசியுள்ளார் ஆமிர் கான். 

Continues below advertisement


‘Phir Na Aisi Raat Ayegi’ பாடல் வெளியீட்டை இந்தியாவின் இளம் படைப்பாளிகளுடன் உரையாடி வெளியிட்ட ஆமிர் கான் தனது முதல் காதல் முறிவு பற்றிய கதையைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், `அது நான் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த காலம்.. அப்போது அந்தப் பெண்ணும் நான் இருந்த அதே கிளப்பில் விளையாடி வந்தார். ஒருநாள் அவர் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய செய்தி எனக்கு தெரிய வந்தது.. நான் மிகவும் மனமுடைந்து போனேன்.. இதில் என்ன சிறப்பு என்றால், நான் அவரைக் காதலித்தேன் என்பதே அவருக்குத் தெரியாது. அந்தக் காதல் நிறைவேறியிருந்தால் நான் நல்ல டென்னிஸ் விளையாட்டு வீரனாகி இருப்பேன்’ எனக் கூறியுள்ளார். 







மேலும், இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது முதல் காதல் குறித்தும், அந்தப் பெண் தன்னை விட்டு நீங்கியது குறித்தும் பகிர்ந்து கொண்ட ஆமிர் கான், தனது மிக நெருக்கமான தோழி மீது முதன்முதலாக காதல் கொண்டதாகவும், இன்றும் அவருக்குத் தன் உணர்வுகள் குறித்து தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். 


‘Phir Na Aisi Raat Ayegi’ என்ற இந்தப் பாடல் ஆமிர் கானின் அடுத்த திரைப்படமான `லால் சிங் சத்தா’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், பலரும் இந்தப் பாடலைப் பாராட்டி வருகின்றனர்.


`லால் சிங் சத்தா’ திரைப்படத்தை ஆமிர் கான் ப்ரொடொக்‌ஷன்ஸ், கிரண் ராவ், வியாகாம் 18 ஸ்டூடியோஸ் ஆகியோர் தயாரிக்க, கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.