இரவின் நிழல் படம் 120 விருதுகள் வென்றதாக இயக்குநர் பார்த்திபன் சொன்னதற்காக அவரை ட்ரோல் செய்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.


சிறந்த பாடகி


69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் பெறுவோரின் பட்டியல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. பலரும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதை தட்டிச்சென்றுள்ளனர். அந்த வரிசையில் கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'மாயவா தூயவா' பாடலைப் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணிப் பாடகி என்ற பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது ஷ்ரேயா கோஷலுக்கு ஆறாவது தேசிய விருதாகும்.


நன்றி தெரிவித்த பார்த்திபன்


இந்நிலையில், எப்போதும் தன்னுடைய படங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படும் இயக்குநர் பார்த்திபன் இணையவாசிகளால் ட்ரோல் செய்யப் பட்டு வருகிறார். தற்போது தனது படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக விருது பெற்ற மகிழ்ச்சியில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.


“இரவின் நிழல் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப் பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. பாடலுக்கு முழுமுதற் காரணமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி. 120 சர்வதேச விருதுகளை இரவின் நிழல் படம் வென்றிருந்தாலும் தேசிய விருது பெருமைக்குரியது“ என்று அவர் கூறியுள்ளார்.


 


ப்ளூ சட்டை நக்கல்






இந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன் “120 சர்வதேச விருதுகள்!!! இந்த 120 விருதுகளையும் மீடியா முன்பு வைத்து உண்மையை நிரூபிக்க முடியுமா? ஆன்லைன் சான்றிதழ்கள் எத்தனை? நேரில் தரப்பட்ட விருதுகள் எத்தனை? ஒருவேளை இது உண்மையாகவே இருந்தாலும் (வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை)..


இவற்றுள் பெரும்பாலானவை திடீரென்று உருவாக்கப்பட்ட உப்மா வெப்சைட் மற்றும் உப்மா அமைப்புகள் தந்தவைதானே? இந்த கேள்விக்கு நாம் பலமுறை பதில் கேட்டும் இதுவரை பதில் வரவே இல்லை. அப்படியென்றால் ஒட்டுமொத்த தமிழர்கள் மற்றும் ஊடகத்தினரை பட்டப்பகலில் ஏமாற்றுவதாக எடுத்துக்கொள்ளலாமா? படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்டது.


இதற்கான ஆதாரங்களை இன்றுவரை இவரிடம் ஒரு பத்திரிகை அல்லது ஊடகம் கூட ஏன் கேட்கவில்லை? இதோ நான் மீண்டும் கேட்டுள்ளேன். 120 விருது வாங்கியதற்கான மொத்த ஆதாரங்களுடன் ப்ரெஸ் மீட் கூட்டி நிரூபிக்க முடியுமா சார்? நிலைமையை சமாளிக்க அவசர அவசரமாக போட்டோஷாப் பட்டியல் ரெடியாகுமா அல்லது இரண்டாம் ஆண்டை நோக்கி இந்த பலத்த மௌனம் பயணிக்குமா? வாய்ல புண்ணா? மௌன விரதமா “ என்று அவர் கேட்டுள்ளார்.