நடிகர் விஜய் சினிமாவில் மீண்டும் நடிப்பார் என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் “the greatest of all time" என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியைத் தொடங்குவதாக தெரிவித்தார். நீண்ட நாட்களாக அவர் அரசியலுக்கு வருவார் என சொல்லப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக விஜய் அரசியல் வருகை குறித்து அறிவித்தார்.
முழு நேர மக்கள் பணியாற்றி விரும்புவதாகவும், தன்னுடைய 69வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் கட்சி தொடர்பான அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் 2026 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகைக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் இடையே ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து வருகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தினரும், ரசிகர்களும் அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என அடித்து சொல்கின்றனர். கட்சி பணிகளும் களைக்கட்டத் தொடங்கியுள்ளது. நேற்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இப்படியான நேரத்தில் தமிழ் சினிமாவில் இனி விஜய் நடிக்க மாட்டார் என்றால் அவரின் இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதில் பலரும் நடிகர் சிவகார்த்திகேயன் தான் தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி என கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே விஜய் நிச்சயம் அரசியலில் இறக்கம் கண்டு சினிமாவுக்குள் திரும்பி விடுவார் என சிலர் கூறுகிறன்றனர். இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், மீம் ஒன்றை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “விஜய் அரசியலுக்கு வந்துட்டாரு..இனிமே சினிமாவுல அவர் இடத்தை யார் நிரப்புவா? என்ற கேள்வியும், “ரெண்டு வருஷம் கழிச்சி அவரே வந்து நிரப்புவாரு. போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்ற பதிலும் இடம் பெற்றுள்ளது.