மனிதனாக பிறந்த பெரும்பாலான மனிதர்களின் கடந்த கால வாழ்க்கை சம்பவங்களோடு கொஞ்சம் கற்பனையும் சேர்த்து கலந்து ஒரு கவிதையாக காலங்களால் அழியாத ஒரு காவியத்தை படைத்து ரசிகர்களை நெகிழ வைத்து சேரனின் 'ஆட்டோகிராஃப்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 



மனதில் புதைத்து கிடைத்த காதலை தோண்டி எடுத்து மீண்டும் அதை பசுமையாக்கி மண்வாசனை வீச செய்த ஆட்டோகிராஃப் திரைப்படத்தை ரசிகர்கள் வாரி அணைத்து கொண்டனர். இன்று வெளியாகும் பல காதல் படங்களுக்கும் அச்சாணியாக அமைந்த ஒரு படம். அதன் சுவடுகள் தான் நாம் இன்றைய சினிமாவில் பார்த்து வருகிறோம். பல முன்னணி நடிகர்களும் இந்த கதையை கேட்டு நெகிழ்ந்து பாராட்டினாலும் அதில் நடிக்க ஏனோ தயக்கம் காட்ட கடைசியில் என்னால் முடியும் என வீறிட்டு எழுந்து சேரனே இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம். தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளியான எளிமையான எதார்த்தமான படைப்புகளில் கர்வமாக என்றுமே முதலிடத்தில் இருக்கும் படம்  'ஆட்டோகிராஃப்' என்றால் அது மிகையல்ல. 


 



அந்த ஆண்டுக்கான தேசிய விருது, தமிழ்நாடு அரசின் விருது, ஃபிலிம்பேர் விருது என விருதுகளை மொத்தமாக வேட்டையாடி இன்று வரை ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனத்தை போட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. பால்ய காதல், பள்ளி காதல், காதல் தோல்வி, பழைய காதலிக்கு திருமண அழைப்பிதழ் என காதலை மையமாக வைத்து கதைக்களம் நகர்த்தப்பட்டு இருந்தாலும் அதில்  சாராரியாக ஒரு வேலையில்லா இளைஞன் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களை இயல்பாக காட்சிப்படுத்தி மனதுக்குள் இடியை இறக்கியது.   


ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்று ட்ரெண்டிங்காக இருக்கும். அது  மசாலா பாடல், ஆக்ஷன் காட்சி, ரொமான்டிக் படம் இப்படி ஏதாவது ஒன்று ஒரு ட்ரெண்ட் செட் செய்து இருக்கும். ஆனால் திரைக்கதையில் பெரிய அளவில் சஸ்பென்ஸ், ஆக்ஷன், திரில்லர் என எதுவுமே இல்லை என்றாலும் மிகவும் எளிமையான திரைக்கதையுடன் ஆத்மார்த்தமான ஒரு உணர்வை ஏற்படுத்திய ஆட்டோகிராஃப் படமும் அதை தூக்கி நிறுத்திய சேரனின் எதார்த்தமான நடிப்பும் பாராட்டப்பட வேண்டியது. வேறு எந்த ஒரு நடிகர் நடித்தாலும் அந்த திரைக்கதைக்கு அப்படி ஒரு நம்பகத்தன்மையை கொடுத்து இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அந்த உயரத்தை மேலும் அண்ணாந்து பார்க்க வைத்து சபேஷ் - முரளியின் பின்னணி இசை. 


 



மல்லிகாவின் கிராமத்து புழுதிக்காடு காதல், பாலக்காடு கேரள தமிழ் கொஞ்சும் கோபிகாவின் காதல், ஒரு ஆண் பெண் உறவு காதலில் தான் முடிய வேண்டிய அவசியமில்லை என சினேகாவின் உணர்வுபூர்வமான நட்பு என அத்தனையும் அழகு. 


பா. விஜய் வரிகளுக்கு சின்னக்குயில் சித்ரா பாடிய 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடல் துவண்டு போன நெஞ்சங்களை எல்லாம் துளிர் விட வைக்கும் எனர்ஜி டானிக். ஞாபகம் வருதே... பாடலை கேட்கும் போதெல்லாம் 90'ஸ் கிட்ஸ்களுக்கு இன்றும் கூஸ்பம்ஸ் வருவதை தடுக்கவே முடியாது. இன்று ஆட்டோகிராஃப் சாயலில் எத்தனை படங்கள் வந்தாலும் ஒரிஜினல் படைப்பை என்றுமே யாராலும் அசைக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.